Tuesday, October 18, 2016

ஒரு மணி நேரம் சிறுநீர் / மலம் கழிப்பதைத் தள்ளிப்போடுவதுகூட நல்லதல்ல...


சிறுநீர், மலம் கழிக்க உரிய நேரம் தராமல் குழந்தைகளை நோயாளிகளாக்குகின்றன பள்ளிகள்
நம் எல்லோருக்குமே வாரிசு நலன் முக்கியமானதாக இருக்கிறது. எல்லோருடைய உயர்ந்தபட்ச ஆசை, கனவு, நோக்கம், லட்சியம் எல்லாவற்றிலும் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் உட்கார்ந்திருக்கிறது. இதற்காக எந்த விலை கொடுக்கவும் தயாராகவும் இருக்கிறோம். குழந்தைகளின் எதிர்காலத்துக்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிந்திக்கிறோம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஆனால், அடிப்படையான அம்சங்களில் கோட்டை விடுகிறோம்.

சென்னையிலுள்ள பிரபலமான ஒரு மருத்துவமனைக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். அங்குள்ள ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சை மையம் (டயாலிஸிஸ் சென்டர்) பக்கம் சென்றபோது, நான் பார்த்த காட்சி அதிரவைத்தது. அந்த மையத்தில் சுத்திகரிப்பு செய்துகொண்டிருந்தவர்களில் கணிசமானவர்கள் குழந்தைகள். பள்ளி செல்லும் வயதுடையவர்கள். பின்னர், மருத்துவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.

நிலைகுலைய வைத்த சூழல்

நவீன வாழ்க்கைச் சூழல், உணவுக் கலாச்சாரம் என்று சிறுநீரகச் செயலிழப்புக் கான காரணங்களைப் பட்டியலிட்டவர், குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கான கார ணங்களில் ஒன்றாக நம்முடைய பள்ளி களில் உள்ள கழிப்பறைச் சூழலைக் குறிப்பிட்டார். “குழந்தைகள் கேட்கும் உணவு வகைகளையெல்லாம் வாங்கித் தரும் பெற்றோர், அவர்கள் உண்ணும் உணவும் பானங்களும் கழிவாக வெளியேறுவதில் எந்த அளவுக்கு அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள்?” என்று கேட்டபோதுகூட இந்தப் பிரச்சினையின் முழு உக்கிரத்தை நான் உணரவில்லை. பின் இதுபற்றி சிறுபிள்ளைகள் பலரிடமும் பேசினேன். பள்ளிச் சூழலை அவர்கள் சொன்ன விதம், ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரான என்னையே நிலைகுலையச் செய்தது. பல பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் சிறுநீர், மலத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளப் பழகியிருக்கிறார்கள். 
ஆசிரியர்களுக்குப் பயந்து, வெட்கப்பட்டு, நடுங்கி!

ஒரு நாள் சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கு நல்லது. ஒரு வாரம்கூட உண்ணாவிரதம் இருக்கலாம். உடல் அதை ஏற்றுக்கொள்கிறது. ஆனால், ஒரு மணி நேரம் சிறுநீர் / மலம் கழிப்பதைத் தள்ளிப்போடுவதுகூட நல்லதல்ல. அன்றாடம் இதை மணிக்கணக்கில் செய்யும்போது உடல் சித்ரவதைக்குள்ளாகிறது. உடல் உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகின்றன.

குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினை

எனக்குத் தெரிந்து, காலையில் ஏழு மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பும் மழலைகள் இருக்கிறார்கள். அவர்கள் கே.ஜி. வகுப்புகள் படிக்கிற பள்ளிக்கூடங்களுக்கு ஐந்து, பத்து கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்களில் செல்ல வேண்டும். அந்தப் பள்ளி வாகனங்கள், வழியில் உள்ள ஏனைய கிராமங்களுக்கும் சென்று குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்குச் செல்லும். பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் பதற்றத்துடன் வீட்டிலிருந்து ஓடிவந்து வாகனங்களில் ஏறும் குழந்தைகள் பள்ளிக்கு வந்தவுடனேயே சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க என்று கழிப்பறைக்கு ஓட முடியுமா? ஆசிரியர்கள் அனுமதிப்பார்களா?
இது அன்றாடம் குழந்தைகள் எதிர்கொள் ளும் பிரச்சினை. ஆனால், அன்றாடம் இப்படிக் கழிப்பறைக்கு ஒரு குழந்தை அனுமதி கேட்டால், அதை நொறுக்கியேவிடுவார்கள் ஆசிரியர்கள். வளர்ந்த பிள்ளைகளேகூட கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்கத் தயங்கும் சூழலே பள்ளியில் இருக்கிறது. அப்படிக் கேட்பதைக் கேலிக்குரியதாக, ஏளனத்துக்குரியதாகவே நாம் கட்டமைத்து வைத்திருக்கிறோம். உயர் வகுப்பு படிக்கிற பிள்ளைகளுக்கே இந்த நிலை என்றால், கே.ஜி. படிக்கிற சிறு குழந்தைகளின் நிலை என்ன? பயமின்றிச் சொல்ல முடியுமா?

ஆசிரியர் என்ற சொல்லும், ஆசிரியர் என்ற பிம்பமும் சாதாரணமானதா அல்லது எளிதில் அணுகக் கூடிய சினேகம் மிக்கதா? ஒரு நாளில் வகுப்பறையில் ஆசிரியர்கள் அதிகமாகப் பயன்படுத்தக் கூடிய வார்த்தை ‘பேசாத!’ என்பதுதான். அதற்கடுத்த சொல் ‘வாய மூடு!’ என்பது. ‘எனக்குச் சிறுநீர், மலம் வருகிறது’ என்று எத்தனை பிள்ளைகளால் பயமின்றிச் சொல்ல முடியும்? தவறி வகுப்பறையிலேயே சிறுநீர் கழித்துவிடுகிற குழந்தைகள் எப்படியான கேலிக்கும் அவமதிப்புக்கும் ஆளாகிறார்கள் என்பதை ஏனைய குழந்தைகள் பார்த்துக்கொண்டேதானே வளருகிறார்கள்!

யோசித்துப்பார்த்தால், நம்முடைய ஒட்டுமொத்தக் கல்வி அமைப்புக்குமே இதுகுறித்து இன்னும் பிரக்ஞை வரவில்லை என்ற முடிவை நோக்கித்தான் நகர வேண்டியிருக்கிறது. நம்மூரில் எத்தனை பள்ளிகளில் போதுமான அளவுக்குக் கழிப்பறைகள் இருக்கின்றன? இரண்டாயிரம் பேர் படிக்கிற பள்ளிக்கூடத்தில் இடைவேளையின்போது ஐந்து, பத்து நிமிடங்களுக்குள் அத்தனை பிள்ளைகளும் கழிப்பறையைப் பயன்படுத்திவிட முடியுமா? அந்த அளவுக்கு வசதிகொண்ட பள்ளி என்று தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகளைக் காட்ட முடியும்? கூட்டத்தில், வரிசையில் நின்று சிறுநீர் கழிக்க, மலம் கழிக்கக் கூச்சப்படுகிற குழந்தைகள் உண்டு. கூட்டமாக இருக்கிறது, வரிசையில் நிற்க வேண்டும் என்பதற்காகவே சிறுநீர் கழிக்காமல் திரும்பி வந்துவிடுகிற பிள்ளைகள் உண்டு. சிறுநீர் கழிப்பதற்காக, மலம் கழிப்பதற்காகக் காத்திருந்த நேரத்தில் மணி அடித்துவிட்டது, நேரமாகிவிட்டது ‘மிஸ் திட்டுவார்கள்’ என்று கழிவை வெளியேற்றாமல், அடக்கிக்கொண்டு அப்படியே ஓடிவந்துவிடுகிற பிள்ளைகளும் உண்டு. குழந்தைகள் பள்ளி செல்லும் காலத்தில் மதிப்பெண்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் வேறு எதற்கும் கொடுப்பதில்லை.

அரை லிட்டர் போதாது
பள்ளிக்குச் செல்கிற குழந்தைகளில் அநேகம் பேர் அரை லிட்டர் தண்ணீருக்கு மேல் எடுத்துச்செல்வதில்லை. ஒரு பகல் முழுவதும் ஒரு குழந்தைக்கு அரை லிட்டர் தண்ணீர் போதாது. ஆனாலும், ஏன் கொஞ்சம் தண்ணீரையே எடுத்துச் செல்கிறார்கள்? காரணம் இதுதான். காலை ஏழு மணிக்கு வீட்டைவிட்டுச் செல்கிற பல குழந்தைகள், பள்ளியிலிருந்து திரும்பி வீட்டுக்கு வந்தவுடனேயே கழிப்பறைக்கு ஓடுவதைப் பார்க்கலாம். இது ஒரு சமூகம் நிகழ்த்தும் வன்முறையின் குறியீடுகளில் ஒன்று. ஒருபுறம், கழிவுகளை உரிய நேரத்தில் வெளியேற்றாததால், இன்னொருபுறம் தேவையான நேரத்தில் தண்ணீர் குடிக்காததால் உடல் பாதிப்புக் குள்ளாகிறது. இதனால், பல நோய்களுக்குக் குழந்தைகள் ஆளாகின்றனர்.

இப்படித்தான் சிறுநீரகப் பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள் என்பதை மருத்துவர் என்னிடம் விளக்கினார். “மூன்று வயதிலேயே பள்ளிக்கு அனுப்பிவிடுகிறார்கள். சிறுநீரை அடக்கி அடக்கி வைப்பதால், சிறுநீர் வெளியேற வேண்டிய பாதையில் கழிவுகள் அடைப்புகளாக மாறி, நெஃப்ரான்களைச் செயலிழக்க வைத்து, சிறுநீரகத்தைச் சுருங்கவைக்கின்றன. சிறுநீரகம் செயல்படாததால் செயற்கை முறையில் டயாலிசிஸ் மேற்கொள்ள வேண்டிய நிலை. சிறுநீரகம் செயலிழந்தால், மாற்று சிறுநீரக அறுவைச் சிகிச்சை, டயாலிசிஸ் சிகிச்சை இரண்டுதான் தற்போதிருக்கும் வழிகள். இவை இரண்டுமே முழு ஆயுள் உத்தரவாதம் இல்லாதவை. எதற்காக ஓடுகிறோம் என்பதையே உணராமல் ஓடிக்கொண்டிருக்கும் தலைமுறை நம்முடையது” என்றார் மருத்துவர்.
ஆமாம், எதற்காக இப்படி ஓடுகிறோம்?
=இமையம்
[from www.tamil.thehindu.com]

Sunday, October 16, 2016

From www.tamil.thehindu.com


நாற்காலிக்கு கொம்பு உண்டு!...


அதிகாரத்தின் இயல்பே அலட்சியம் செய்வதுதானா ?’ என ஒரு நண்பர் கேட்டார்.
அவர் அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்பவர். உயர் அதிகாரிகளின் குண விசித்திரங்களைப் பற்றி அடிக்கடி புலம்பிக்கொண்டே இருப்பார். அரசாங்க அலுவலகத்தில் நடைபெறும் குளறுபடிகளைப் பற்றி அவர் சொல்லும்போது அதிர்ச்சியாகவே இருக்கும். 
அன்று அவர் கேட்ட கேள்வி எளிதானதாக இல்லை. நான் அவரிடம் ஒரு சம்பவத்தை விவரித்தேன்.
ஜார் மன்னர் ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவில் ஒரு ராணுவ அதிகாரி இருந்தார். அவர் யாரையும் மதிக்கவே மாட்டார். ஊழியர்களை அலட்சியமாக நடத்துவார். இந்த அதிகாரியின் கடுமையைக் கண்டு அனைவரும் பயந்தார்கள். தன்னுடைய எல்லையற்ற அதிகாரத்தை நினைத்து, அந்த ராணுவ அதிகாரி பெருமை கொண்டிருந்தார்.
இந்த அதிகாரிக்கு காரின் என்ற பியூன் மட்டுமே விருப்பமான நபராக இருந்தார். காரினை அலுவலகத்தில் எவருக்குமே பிடிக்காது.
காரின் ஒய்வுபெறும் நாள் வந்தது. அதற்கான பிரிவு உபச்சார விருந்தில் கலந்துகொள்ளும்படி அலுவலக நண்பர்களை அழைத்தார் காரின். எவருமே வரவில்லை. ராணுவ அதிகாரியும் கூட வரவில்லை. கடைசியாக ஒரே ஒரு நண்பர் மட்டும் வந்திருந்தார்.
அவரும் கோபத்துடன் சொன்னார்: ‘‘நீ அந்த கேடு கெட்ட ராணுவ அதிகாரியின் கையாள். சரியான ஒட்டுண்ணி. உன்னோடு படித்தவன் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே நான் வந்திருக்கிறேன்’’ என்றார்.
அதைக் கேட்ட காரின் சொன்னார்: ‘‘நீ சொல்வது உண்மை தான். நான் ஒரு கடைநிலை ஊழியன். என்னால் அப்படித்தான் நடந்துகொள்ள முடியும். அதிகாரி மட்டும் முட்டாள் இல்லை; நீங்களும் முட்டாள்தான். நீங்கள் அதிகாரத்தின் இயல்பைப் புரிந்துகொள்ளவே இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதைச் சொன்னாலும் சரி என தலையாட்ட ஓர் ஆள் வேண்டும். சொன்ன விஷயத்தை நாம் செய்ய வேண்டியதுகூட அவசியம் இல்லை.
முகஸ்துதிதான் அதிகாரிகளின் பலவீனம். இது அந்த நாற்காலியின் இயல்பு. அதில் யார் வந்து அமர்ந்தாலும், உடனே அவர்களுக்கு கொம்பு முளைத்துவிடும். அதிகாரி தன்னை ராஜாவாகவே கற்பனை செய்துகொண்டுவிடுவான். அகம்பாவமாக நடந்துகொள்வான். ஆனால், ஒன்றை மறந்துவிடாதே. வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டவர்களை விடவும் புகழ்ச்சியால் வீழ்த்தப்பட்டவர்களே அதிகம். எளிமை, நேர்மை, உண்மை இந்த மூன்றும் கொண்டவனே நல்ல அதிகாரி. அவர்கள் எப்போதும் புகழ்வெளிச்சத்தை விரும்புவதே இல்லை’’ என்றார்.
இந்த நிகழ்வைக் கேட்ட நண்பர் சலிப்போடு சொன்னார்: ‘‘அப்படி ஒன்றிரண்டு பேர்தானே நல்ல அதிகாரிகளாக இருக்கிறார்கள். மற்றவர்கள் சுயலாபத்துக்காக அதிகாரத்தை உபயோகிப்பவர்கள்தானே. அவர்களுடன் எப்படி வேலை செய்வது? அதுதான் நம் காலத்தின் சாபக்கேடு’’ என்றார்.
நண்பர் தனது ஆற்றாமையுடன் விடைபெற்றுப் போனார். அன்றிரவு வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் ‘சந்தால்’ பழங்குடிகளின் கதை ஒன்று இருந்தது. அது நாங்கள் பேசிக்கொண்டிருந்த விஷயத்தின் கதை வடிவமாகவே இருந்தது.
ஆச்சரியத்துடன் நண்பரை தொலைபேசியில் அழைத்துச் சொன்னேன்: ‘‘ஒரு நாள் உயரமான கோட்டை சுவர் ஒன்றின் மீது ஓர் ஆடு ஏறி நின்றுகொண்டது. அந்த வழியில் ஒரு ஓநாய் போய்க் கொண்டிருந்தது. உயரத்தில் இருந்து ஓநாயைப் பார்த்த ஆடு இளக்காரமாக, ‘ஏய் இங்கே வா…’ எனக் கூப்பிட்டது.
ஒநாய் நிமிர்ந்து பார்த்து, தொலைவில் தன்னைப் பார்த்தவுடன் பயந்தோடும் ஆடு, இன்று அலட்சியமாகக் கூப்பிடுகிறதே என திகைப்புடன் யோசித்தது. ஓநாய் தன்னை முறைப்பதை கண்ட ஆடு சொன்னது: ‘என்ன முறைக்கிறே? அந்தச் செடியில் இருந்து நாலு இலை பறிச்சிட்டு வா. எனக்குப் பசியா இருக்கு!’
ஓநாய் அதைக் கண்டுகொள்ளாமல் நடந்தது. அதைக் கண்ட ஆடு கோபத்துடன் சொன்னது: ‘ஏய்… நான் சொல்றது காதில் கேட்கலையா? நான் கீழே இறங்கி வந்தா, என்ன நடக்கும் தெரியுமா?’
அதைக் கேட்ட ஓநாய் சொன்னது: ‘வந்து பார் தெரியும். நீ ஏறி நிற்கிற உயரம்தான் உன்னை இப்படி பேச வைக்குது. இறங்கி வா, அப்போ நீ யார் என்ற உண்மை தெரியும்' என்றது’’ என்றேன்.
எளிமையான கதை. உயரத்துக்குப் போகப் போக ஒருவரின் இயல்பு எப்படி மாறிவிடுகிறது என்பதற்கு அடையாம்தான் இந்தக் கதை.
அதிகாரிகள்
எல்லோரும் ஆமாம் சாமிகள் இல்லை. சிலர் அதிகாரத்தை மக்களுக்கு சேவையாற்றும் அறமாகக் கருதுகிறார்கள். எவ்விதமாகவும் வளைந்து கொடுக்காமல் நேர்மையாகப் பணியாற்றுகிறார்கள். உண்மையை நிலைநிறுத்த தன்னையே பலி கொடுத்துக் கொண்டவர்களும் உண்டு.
‘எ மேன் ஃபார் ஆல் சீசன்ஸ்’ (A Man for All Seasons) என்ற திரைப்படம் 1966-ல் வெளியானது. பிரெட் சின்மேன் தயாரித்து இயக்கியது. இங்கிலாந்து அரசரான எட்டாம் ஹென்றிக்கு வாரிசு இல்லாமல் போகவே அவர் தனது பட்டத்து அரசியான கேதரீனை விவாகரத்து செய்துவிட்டு, ஆனி போல்யன் என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்.
அதற்கு திருச்சபை அனுமதி அளிக்கவில்லை. கோபம் அடைந்த மன்னர் திருச்சபையின் அதிகாரங்களை ரத்து செய்ததோடு, தானே ‘கிறிஸ்துவ சபையின் முழு அதிகாரம் கொண்டவன்’ என்று அறிவித்துவிட்டு, அதுவரை இருந்த கார்டினலின் அதிகாரத்தையும் பறித்துக் கொண்டார்.
எட்டாம் ஹென்றியின் வழிகாட்டியாகவும் மந்திரியாகவும் இருந்த தாமஸ் மோர் அந்தச் செயலை ஆதரிக்கவில்லை. வெளிப்படையாக எதிர்த்தார். அதன் காரணமாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு உருவானது. எட்டாம் ஹென்றி எல்லா எதிர்ப்புகளையும் மீறி ஆனியை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.
தாமஸ் மோர் அதைக் கண்டிக்கவே, அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மன்னரே தவறு செய்தால்கூட அதைக் கண்டிக்க வேண்டும் என்ற மன உறுதியோடு செயல்பட்ட தாமஸ் மோரின் வாழ்வை இந்தப் படம் மிகச் சிறப்பாக விவரிக்கிறது. ஆறு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ள இந்தத் திரைப்படத்தை அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும்.
பழங்குடி மக்கள் தங்கள் எதிர்ப்பு உணர்வை, சுதந்திர மனப் போக்கினை வெளிப்படுத்தவே கதைகள் மற்றும் பாடல்களைப் புனைந்தனர். ‘கொடிய மிருகத்தை அம்பால் வீழ்த்த வேண்டும்; கொடிய மனிதனை கதையால் வீழ்த்த வேண்டும்’ என பழங்குடியினப் பாடல் கூறுகிறது. கதைகளும் ஆயுதம்தான்...
-S.RAMAKRISHNAN