....அன்புள்ள.. என்று துவங்கி, இப்படிக்கு என்று முடிக்கும் ஏராளமான கடிதங்களை அன்றைய நாட்களில் பலரும் எழுதியிருப்பார்கள். இதைப் படிக்கும் சிலரும் கூட கடிதங்கள் வாயிலாக எத்தனையோ தகவல்களை பரிமாறிக் கொண்டிருப்போம்.
விடுமுறை நாட்களில் நண்பர்களுக்கும், முக்கியச் செய்திகளை கடிதங்கள் வாயிலாக உறவினர்களுக்கும் தெரிவித்திருப்போம். அவர்களது பதில் கடிதங்களுக்காக காத்திருப்போம். தபால்காரர் நம் வீட்டு வாசலில் வந்து பெயர் சொல்லி பெல் அடிக்கும் போது ஓடிச் சென்று தபாலை வாங்கிப் படிக்கும் சுகமே அலாதி.
இதுபோல, முக்கியப் பண்டிகைகளுக்கும் வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பி வாழ்த்துகளையும் பரிமாறிக் கொள்வோம். ஆனால், தற்போது மின்னஞ்சல், செல்போன், குறுந்தகவல்கள் என வேகமான தகவல் பரிமாற்றத்தின் விளைவாக கடிதங்கள் பலவந்தமாக விடைபெற்றுக் கொண்டன.
இந்த கடிதங்கள் மாணாக்கருக்கு எத்தனை விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது. கடிதம் எழுதும் முறை, ஒரு ஆசான் போல் பல்வேறு விஷயங்களை பிள்ளைகளுக்கு தானாகவே ஏற்படுத்தின. கடிதத்தைத் துவக்கும் முறை, முதலில் நலம் விசாரிப்பு, பிறகு நலம் தெரிவிப்பு, தகவல், மகிழ்ச்சியான விஷயத்தை முதலில் கூறுவது, பிறகு மெல்ல துன்பச் செய்தியை சொல்வது, பிறகு இயல்பாகப் பேசி கடிதத்தை முடித்து விடை பெறுவது, பதில் அனுப்ப வலியுறுத்துவது, ஊருக்கு அழைப்பது, உற்றார் உறவினர்களின் நலம் விசாரிப்பது என ஒரு கடிதத்தில் எத்தனை முறைகளை வைத்திருந்தோம்.
ஆனால், அனைத்தையும் இழந்து விட்டு மொட்டைப் பனமாரமாய் அல்லவா இருக்கிறது இப்போதைய தகவல் தொடர்புகள். எப்படி இருக்கிறாய் என்பதை கூட மின்னஞ்சல்களிலும், குறுந்தகவல்களிலும் h r u என்று சுருக்கிவிட்டோம். இது நம் மனதும் சுருங்கிவிட்டதாகவே எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்த கடிதம் எனும் தகவல் தொடர்பை நம் பிள்ளைகள் பின்பற்ற வழி ஏற்படுத்துங்கள். நெருங்கிய உறவுகளுக்கு கடிதங்கள் எழுதி அதனை அஞ்சல் செய்யுங்கள். சிறிய வயதுள்ள பிள்ளைகள் இருக்கும் வீட்டுக்கு கடிதம் எழுதி அவர்களையும் பதில் கடிதம் எழுதச் சொல்லுங்கள்.
அஞ்சலில் எல்லாம் அனுப்ப முடியாது என்று சொல்பவர்கள், சிறார்களை, அவர்களது தாத்தா பாட்டிகளுக்கு கடிதம் எழுதி நேரில் கொடுக்க செய்யலாம். இதன் மூலம் அவர்களது மனதில் இருக்கும் பல்வேறு விஷயங்கள் வெளியே வருவதை நீங்களே பார்த்து ஆனந்தப்படுவீர்கள்.
........Vanisree..
(Courtesy:
Dinamani.com)