ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகத்தை தொல்பொருள் ஆராய்ச்சியால் கண்டறிவது போல், தற்போதைய நம்மூரு நாகரிகத்தை, அடுத்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்படும் வரலாறு எப்படிப் புரிந்துகொள்ளும் என சிந்தித்துப் பார்த்ததில்...
பொதுச் சொத்துக்களை கொள்ளையடிக்கும் உரிமை அரசாங்கத்திடமே இருந்திருக்கிறது. அப்படி கொள்ளையடிக்க விருப்பமுள்ளவர்களை தேர்வு செய்யும் பொறுப்பு மட்டும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களை அடையாளம் காண்பதற்காக அவரவர்க்கென தனித்தனி சின்னங்களும் வண்ணக் கொடிகளும் இருந்திருக்கின்றன!
வாகனப் போக்குவரத்து மிகுந்து காணப்பட்டிருக்கிறது. அரசு பேருந்துகளின் படிக்கட்டுகளில் ஊஞ்சலாடியபடி இனிதே பயணிக்கும் முறை இருந்திருக்கிறது. நடத்துநர் என்றழைக்கப்பட்டவர், விசில் என்ற இசைக் கருவியை இசைப்பதில் தேர்ச்சி பெற்றவராக இருந்திருக்கிறார். அவரது இசைக்கேற்ப பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டபடி இயங்கியிருக்கின்றன!
சமையல் செய்வதற்கென மிக்ஸி, கிரைண்டர் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தியுள்ளனர். நீர் அருந்தப் பயன்படுத்திய பிளாஸ்டிக்கிலான பாட்டில் முதல், மிக்ஸி கிரைண்டர் வரை அனைத்திலும் ஒரு பெண்மணியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த உபகரணங்கள் அனைத்தையும் கண்டுபிடித்ததன் காரணமாக அவரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்!
மது என்ற பெயரில் அரசாங்கமே கடைகளில் விஷத்தை விற்றிருக்கிறது. அந்த விஷத்தைக் குடித்ததால் பலர் இறந்துள்ளனர். பல குடும்பங்கள் அனாதையாகியுள்ளன. இருந்தபோதிலும் தங்களுக்கு அதிக வருமானத்தைத் தந்ததால் அந்த விஷத்தை அரசாங்கம் நிறைய விற்றுள்ளது. அதே நேரத்தில் கண் துடைப்புக்காக ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என்ற வாசகத்தை மட்டும் மதுக்குப்பியில் எழுதி வைத்துள்ளது.
பொதுமக்களில் வயதால் மூத்தவர்கள் மட்டுமே அரசியல் தலைவர்களாக உருவாகியிருக்கிறார்கள். அந்த அரசியல் தலைவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஊரெங்கும் சுவர்களில் அவர்களின் பெயர்களையும் உருவத்தையும் வரைந்து, மறக்காமல் அவர்களின் முதுமையை குறிக்கும்வகையில் ‘வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்!’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்!
பிளெக்ஸ்கள், பிளாஸ்டிக்குகள் போன்றவை அக்காலத்தில் நிறைய பயன்படுத்தப்பட்டுள்ளன. டன் கணக்கில் தயாரிக்கப்பட்ட அவை மண்ணில் மக்காமல் கிடந்து உலகின் அழிவுக்கே காரணமாக இருந்திருக்கின்றன.
பொதுமக்கள் சிறுநீர் கழிப்பதற்காக குட்டிக் குட்டி கழிப்பறைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்டப்பட்டுள்ளன. அவை தவிர, நகரின் முக்கிய வீதிகளில் மூத்திரச் சந்து என்ற திறந்தவெளிப் பகுதியில், எவ்வித நெருக்கடியுமில்லாமல் சிறுநீர் கழிக்கும் வசதி செய்து தந்திருக்கிறார்கள். அப்படி சிறுநீர் கழிக்கும் போது வேடிக்கை பார்ப்பதற்காக கவர்ச்சிப் பட சுவரொட்டிகளை மூத்திரச் சந்தின் சுவரெங்கும் ஒட்டும் முறையும் கையாளப்பட்டிருக்கிறது!
சாலைகளனைத்தும் கருங்கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன. அந்த கருங்கற்களின் மீது, பயணிப்பவர்களை காத்து கருப்பு அண்டக் கூடாதென்பதற்காக தார் என்ற கறுப்பு பொருளை லேசாக தெளித்து வைக்கும் சாஸ்திரம் கடைபிடிக்கப்பட்டுள்ளது!
ஒரு பக்கம் பசுமையான விவசாய வியாபாரம் அமோகமாக நடந்து வந்திருக்கிறது. இன்னொரு பக்கத்தில் விவசாய நிலங்களை பல வண்ணங்களில் அழகுபடுத்தி விவசாய நில வியாபாரமும் அமோகமாக நடந்து வந்திருக்கிறது! விவசாய நிலங்களில் வீடு கட்டி, மொட்டை மாடிகளில் தொட்டிச் செடிகளில் விவசாயம் செய்யும் அதிநவீன விவசாயத்தையும் கடைபிடித்து வந்திருக்கிறார்கள்!
ஏரிகள் என்ற பெயரிலான அபாயகரமான நீர் நிறைந்த பள்ளத்தாக்குகளை மேடாக்கி வீடுகள் கட்டவும், அந்த வீடுகள் கட்டும் கற்களுக்காக, மலைகள் என்றழைக்கப்பட்ட மேடான பகுதியை வெட்டியெடுத்து சமப்படுத்துவதும் நடந்து வந்திருக்கிறது!
மக்களின் பொழுதுபோக்குக்காக செல்வந்தர்களால் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள், உருண்டையான பந்து என்ற ஆயுதத்தாலும், பேட் என்றழைக்கப்பட்ட மரத்தினால் செய்யப்பட்ட ஆயுதத்தாலும் மோதிக்கொள்ளும் விளையாட்டு நடைமுறையிலிருந்தது. அவர்களில் யார் ஜெயிப்பார்கள் தோற்பார்களென பந்தயம் கட்டும் முறையும் இருந்து வந்திருக்கிறது!
....வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்