குளத்தில் குளிக்கும்போது உங்களை எத்தனை தடவை முதலை கடித்திருக்கும்? விமானத்திலிருந்து எத்தனை தடவை பாராசூட்டை மாட்டிக்கொண்டு தப்பியிருப்பீர்கள்? கடற்கரையில் எத்தனை தடவை சுனாமியை எதிர்கொண்டிருப்பீர்கள்?
நீங்கள் புன்னகைக்கக் கூடும்.ஏனென்றால், இது போன்ற பெரிய சம்பவங்கள் நடக்க வாய்ப்பு குறைவு. ஆனால், இதன் சாயலில் சிறிய சம்பவங்கள் நடந்து சிறிய பாதிப்புகளைத் தினமும் பெற்றுக் கொண்டிருப்பீர்கள்.
உதாரணமாக, குளத்தில் மீனோ, சிறிய பூச்சிகளோ உங்களைக் கடிக்கலாம்; உங்களின் வாகனம் பிரேக்டவுன் ஆகி இருக்கலாம்; சுனாமிக்குப் பதில் மழையால் நீங்கள் நனைந்திருக்கலாம்.
அசாத்தியம் சாத்தியமா?
ஒருநாள் அண்டார்ட்டிகாவில் ஆராய்ச்சி; அடுத்தநாள் ராக்கெட்டில் பயணம்; அடுத்த மாதம் அமேசான் நதியில் ஒரு பிரார்த்தனை என்று நீராடச் செல்கிறோம்...இப்படி எல்லாம் யாரும் பரபரப்பாக இருக்கவே மாட்டோம். ஒட்டுமொத்த வாழ்விலேயே நான்கு, ஐந்து பெரிய சம்பவங்கள் நடக்கும். அவ்வளவே, மீதி எல்லாம் “நாளை மற்றுமொரு நாளே” என்றுதான் கழியும்.
அதாவது, உங்கள் வாழ்வில் பெரிய சம்பவங்கள் தினமும் நடந்துகொண்டே இருக்கப் போவதில்லை. சின்னச் சம்பவங்களும், அந்தப் பாதிப்புகளும்தான் அதிகம்.
இந்தக் கருத்தை அப்படியே மனிதர்கள் மேல் பொருத்திப் பாருங்கள்--- நீங்கள் பெரிய மனிதர்கள் என்று கருதுபவர்களை சந்திக்கவே போவதில்லை. அதாவது பிரதமர் மோடியை, ரஜினிகாந்த்தை, பில்கேட்ஸை நீங்கள் சந்திக்கும் வாய்ப்பு குறைவு.
ஆனால், உங்களால் நம்மில் ஒருவராகக் கருதப்படும் ஒரு சிறியவரை, சாதாரணமானவரை, உள்ளூர் வியாபாரியை, வார்டு கவுன்சிலரை, கவுன்சிலருக்கு வேண்டியவரை, செல்ஃபோன் கடை வைத்திருப்பவரை...இவர்களை அன்றாடம் காண முடியும்.
ஆக, உங்கள் வாழ்க்கை சாதாரணமானவர்கள் என்று உங்களால் குறைத்து மதிப்பிடப்படும்; சற்றே இகழ்வாகவும்; இரண்டாம் கட்டமாகவும் கருதப்படும் ஆட்களுடனும்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.
எப்படி சிறிய சம்பவங்களால் நீங்கள் அன்றாடம் பாதிப்பு அடைகிறீர்களோ, அதேபோல் சிறியவர்கள் அல்லது சாதாரணமானவர்கள் என்று உங்களால் கருதப்படுகிறவர்கள்தான் உங்களுக்கான அன்றாட பாதிப்புகளையும், காயங்களையும் தர முடியும்.
நீங்கள் தீபிகா படுகோனை,தோனியை சந்திக்கப் போவதில்லை. அவர்களால் தொந்தரவும் அடையப்போவதில்லை!
நம்மைப் போல் இருப்பவரிடம்
நீங்கள் மனவருத்தம் அடைவது, சாக்கடை வீட்டுவாசல் வரை வருகிறது எனப் புகார் அளித்தால் “அப்படித்தான் வரும்” என்று கூறும் பக்கத்து வீட்டுக்காரரால்தான். நீங்கள் வருவது தெரிந்தும், பார்க்காத மாதிரி போகும் முன்னாள் நண்பரால்தான். அன்றாடம் பார்க்கும் உங்களைப் போன்ற ஒருவரால்தான்!
சொல்லப்போனால், பெரிய மனிதர்கள் என்று நீங்கள் கருதுபவர்களை வெகு அபூர்வமாகவே நீங்கள் சந்திப்பதால் அவர்களிடம் அதிகபட்ச பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். வியக்கும் அளவு சகிப்புத்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். பெரிய மனிதர்களும் அவர்களது பக்கத்து வீட்டுக்காரருக்கு சாதாரண மனிதராகத்தான் இருப்பார் என்பது வேறு விஷயம். ஆனால் ஒபாமா, “நீரின் இயல்பு பள்ளத்தை நோக்கிப் பாய்வதே..” என்றால் “பெரிய மனுஷன் பெரிய மனுஷந்தான்யா.சின்ன விஷயத்தை எவ்வளவு அழகா விளக்கறாரு...” என்பீர்கள்.
ஆனால், “நம்மைப் போல் இருப்பவர்களிடம்” நாம் அந்த அளவுகோலை உபயோகிப்பதில்லை. அவர்களிடம் அதிகாரத்தையும், கதாநாயகத்தன்மையையும் வெளிப்படுத்துவோம். தினுசுதினுசாய் கோபம் கொள்வோம். ஆனால், நம் வாழ்வை திரும்பிப் பார்த்தால், பிரச்சினைகளுக்கெல்லாம் மூலகாரணம், வெகு சாதாரணமாகத்தான் தொடங்கி இருக்கும். அதை சாதாரணமானவர்கள் என்று மதிப்பிடப்பட்டவர்கள்தான் தொடங்கி வைத்திருப்பார்கள்.
அலட்சியப்படுத்தலாமா?
எனக்கொரு நண்பன் இருந்தான். என் மதிப்பீட்டில் அவன் ரொம்பவும் சாதாரணமானவன். ஏதோ தகராறில் பேசுவதும் கிடையாது. சில வருடங்களுக்குப் பிறகு அப்போதைய என் மேலாளர் ஒரு அலுவலகத்திலிருந்து சில விவரங்களை வாங்கி வரச் சொன்னார். என் கர்வம் ஒழிய வேண்டுமில்லையா, அதனால் அந்த விவரங்கள் என் சாதாரண எதிரியிடம்தான் இருந்தன. “வாழ்க்கைப் பயணத்தில் நம் பைக்கிற்கு எந்தெந்த பங்க்கில் பெட்ரோல் போட வேண்டியிருக்கும் என்பதை யார் அறிவார்?” என்றொரு தத்துவத்தை அன்றிரவே உருவாக்கினேன்.
பாண்டிய மன்னன் மற்றும் தசரத மன்னனின் பார்வையில் முறையே கண்ணகியும், மந்தரையும் சாதாரண குடிமகளாகவும், பணிப்பெண்ணாகவும்தானே காட்சியளித்திருப்பார்கள்? முதலில் அந்தக் கண்ணோட்டத்தில்தானே அவர்களை அணுகியிருப்பார்கள்?
இதைத்தான் முன்னோர்கள் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்றார்கள். வாகனத்தில் இருக்கும் சிறிய நட்டு சரியான நேரத்தில் கழன்றால் உங்களைப் பார்க்க நிறையப் பேர் சாத்துக்குடியிலிருந்து ஆர்லிக்ஸ் வரை வாங்கி வரத்தானே செய்வார்கள்?
இதற்கு அர்த்தம் யாரிடமும் உங்கள் உணர்வுகளைக் காட்டாதீர்கள் என்பதல்ல. சாதாரணமானவர்கள் என்ற நினைப்பில் யாரையும் அலட்சியம் செய்யாதீர்கள் என்பதே!
துணைப் பாத்திரங்கள் முக்கியம்
ஒருவரை எப்படி “சாதாரணமானவர்” ஆக்குகிறோம்? உங்களைவிடக் கீழ் அந்தஸ்திலும், வாழ்க்கை முறையிலும் இருந்தால் அவர் சாதாரணமானவர் என்றால், அது ஆணவமான கருத்தாகத்தானே இருக்க முடியும்?
ஒரு சினிமாவில் அதன் திரைக்கதையின் சுவாரசியத்துக்கும், நாயகனின் வெற்றிக்கும் உதவுவது அட்டகாசமான துணைபாத்திரங்களே! திருவிளையாடலில் சிவாஜியின் சிவபெருமான் வேடம் நிற்பது தருமி நாகேஷாலும், ஆணவ பாடகர் பாலையாவாலும்தான். நாயகனில் வேலுநாயக்கரின் பாத்திரத்தை மெருகேற்றுவது டெல்லி கணேஷும், ஜனகராஜும்தான். இவர்களை நீக்கிவிட்டு காட்சியைப் பார்த்தால், உங்கள் வாழ்விலும் துணைப் பாத்திரங்களின் பங்கைப் புரிந்துகொள்வீர்கள்!
உங்களுக்கு உதவ ஒரு சூப்பர் ஹீரோ எப்போது வருவார் என்று சொல்ல முடியாது. ஆனால், ஒரு சாதாரண மனிதர்--யாருடன் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களோ, அவர்தான் வருவார்; அவரால்தான் எந்தத் தருணத்திலும் உங்களுக்கு உதவவும் முடியும்!
=ஷங்கர்பாபு.
[www.tamil.thehindu.com]