Sunday, November 20, 2016

விரைவில் வரலாம் பணமற்ற உலகம்!...

யுனைடெட் பேமண்ட்ஸ் இண்டர்பேஸ் எனப்படும் யுபிஐ தொழில்நுட்பம் இந்தியாவில் நுழைந்துவிட்டது.
எனது தாத்தா அவரது அப்பா போலவே ஒரு வியாபாரி. ராமநாதபுரம் மாவட்டக் கிராமமான கடலாடியில் அவர் கடை வைத்திருந்தார். அவரது கடைக்கான சரக்குகளை வாங்க ராமநாதபுரம் டவுன் அல்லது மதுரைச் சீமைக்கு அவர் புறப்படுகிற விதமே தனிவகையாக இருக்கும்.

கனத்த கோவணம்போலப் பட்டையாகவும் நீளமாகவும் ஒரு பை வைத்திருப்பார். அது சரியாக ஒரு ரூபாய் நோட்டுக் கத்தை உள்ளே நுழையும் அளவுக்குக் கச்சிதமாக இருக்கும். அதற்குள்ளே நுழைத்து நுழைத்துக் கத்தைகளை அடுக்குவார். கவனமாக அதை எடுத்து இடுப்பில் சுற்றுவார். இரு முனைகளிலும் இருக்கிற கொக்கியை மாட்டிக்கொள்வார். ஒரு தலைமறைவுக் குற்றவாளிபோலப் பெல்ட் அவரது இடுப்பில் தலைமறைவு கொள்ளும். அதன் மேலே டிராயர் போட்டு நாடாவை இழுத்துக்கட்டிக்கொண்டு போவார். பணத்தை ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்குப் பத்திரமாகக் கொண்டுசெல்ல நம்மூரில் இருந்த நடைமுறைகளில் ஒன்று இது.

பணத்தின் பயணங்கள்
மதுரை வியாபாரிகளுக்குப் பத்து வயசுப் பையன்கூட அண்ணாச்சிதான். தெற்கு வாசலில் இருக்கும் கமிஷன் மண்டிகளில் வெல்லம் மலையாகக் குவிந்து கிடக்கும். விவசாயிகளின் ஒரு வருட உழைப்பு பணக்கட்டுகளாக மாறும் இடம் அது. ஒரு கடையிலிருந்து இன்னொரு கடைக்குப் பணக்கட்டுகளை இடம் மாற்றும்போது பனியனுக்குள் பணக்கட்டுகளை அடுக்கிக்கொண்டு போவார்கள். இப்படியான வழிமுறைகளுக்கான அவசியம் எல்லாம் இன்று குறைந்தேவிட்டது.

பணத்தை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டுபோகும் வழிகள் இன்று கடவுளின் பத்து அவதாரங்கள்போலப் பலவகையாக இருக்கின்றன. அதில் ஒன்று பண அட்டை. மற்றொன்று கடன் அட்டை. இணைய வழி பணப் பரிமாற்றம் உள்ளிட்ட வழிகளும் உள்ளன.

காலாவதியாகும் ஏடிஎம்
இந்த அட்டைகள் வந்தாலும் பணப் பரிமாற்றத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. ‘பேடிஎம்’(Paytm) போன்ற மொபைல் வாலெட் நிறுவனங்கள் தங்களின் போட்டி நிறுவனங்களின் பணப் பரிமாற்றங்களில் சிக்கல்களை உருவாக்குவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. பண அட்டைகள் நகலாக்கம் செய்து மோசடி செய்கிறார்கள் என்ற புகார்களும் எழுந்துள்ளன.

இந்தச் சூழலில்தான் யுனைடெட் பேமண்ட்ஸ் இண்டர்பேஸ் எனப்படும் யுபிஐ (UPI) புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் நுழைந்துவிட்டது. இது உங்களின் செல்போனையே ஒரு பண அட்டையாக மாற்றுகிறது. இதன் செயலியை எல்லோரும் தங்களின் செல்பேசியில் நிறுவிக்கொண்டால், ஏடிஎம் பக்கம் போகத் தேவையில்லை. ஏற்கெனவே பலர் தற்போது தாங்கள் பணம் போட்டு வைத்துள்ள வங்கிக்கே போவதில்லை. வங்கியைப் பண அட்டை (ஏடிஎம் கார்டு) விழுங்கி வருகிறது. அதைப் போல நாளை பண அட்டையை நமது கையில் உள்ள செல்பேசி விழுங்க ஆரம்பிக்கிற ஒரு புதிய சூழலில் நாம் நுழைந்துள்ளோம்.

குறுஞ்செய்தி போதும்
அப்படி என்ன இருக்கிறது இந்தப் புதிய தொழில்நுட்பத்தில்? இணைய வழியாகப் பணத்தை வேறு ஒருவருக்கு மாற்றுபவர்கள் ஐ.எம்.பி.எஸ். எனும் (உடனடி பணப் பரிமாற்றச் சேவை) முறையில் அனுப்புவார்கள். பணத்தை யாருக்கு அனுப்புகிறோமா அவரது வங்கிக் கணக்கு எண்ணும் அந்த வங்கியின் ஐ.எஃப்.எஸ்.சி. கோட் எனும் அடையாள எண்ணும் அதற்கு வேண்டும்.

ஆனால், தற்போது புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ள முறையில் அது எதுவும் உங்களுக்குத் தெரிய வேண்டாம். neethi@indianbank அல்லது 1234567890@indianbank என்று உங்களின் செல்பேசி எண்ணை வைத்தோ உங்களுக்கு ஒதுக்கப்படுகிற ஒரு அடையாள எண்ணை மட்டும் வைத்துக்கொண்டு உங்களால் உடனடியாகப் பணத்தை இன்னொருவருக்கு அனுப்ப முடியும்.

ட்ருபே எனும் செயலி
கடைக்காரர் தனது செல்பேசியிலிருந்து ஒரு குறுஞ்செய்தி அனுப்புவார். அதில் உள்ள சுட்டியைச் சொடுக்கி, நீங்கள் அவருக்குத் தர வேண்டிய பணத்தைக் குறிப்பிட்டு அனுப்பினால், அவரது வங்கிக் கணக்குக்குப் பணம் போய்விடும். அவரும் ‘கிடைத்துவிட்டது நன்றி’ என்பார். நீங்கள் போய்க்கொண்டேயிருக்க வேண்டியதுதான்.

இணைய வழி பணப் பரிமாற்றங்கள், பண அட்டை மற்றும் கடன் அட்டை பயன்படுத்திச் செய்யப்படும் பரிமாற்றங்கள், மொபைல் வாலெட்கள் மூலமாக நடைபெறும் பரிமாற்றங்கள் எல்லாவற்றையும்விட மிக எளிதானது இந்த முறை.

இந்தப் பணப் பரிமாற்ற முறையில் ஆதார் அட்டையும் இணைக்கப்பட உள்ளது. தற்போது இந்தப் புதிய முறைக்கு ஆக்ஸிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எஃப்.சி. உள்ளிட்ட 19 வங்கிகள் சம்மதித்துள்ளன. இந்த வருட முடிவுக்குள் மேலும் பல வங்கிகள் இதில் இணையும். மத்திய அரசின் தேசியப் பணப் பரிமாற்றக் கழகம் எனும் அமைப்பின் முன்முயற்சியில் ட்ருபே (Trupay) எனும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

20 கோடித் திறன்பேசிகள்
இந்தியாவில் ஆதார் அட்டைகளை வாங்கி யிருப்பவர்களும் சாதாரண செல்பேசிகளை வைத்திருப்போரும் 100 கோடியைச் சமீபத்தில் தாண்டியுள்ளனர். ஸ்மார்ட் போன்கள் எனப்படும் திறன்பேசிகள் 20 கோடிப் பேரிடம் இருக்கின்றன.

இந்தியா மட்டுமே இந்தப் புதிய வழிமுறைக்கு மாறவில்லை. ஆப்பிரிக்க நாடுகளான கானா, கென்யா, தான்சானியா நாடுகளும் இதை அமல்படுத்திவிட்டன. சுமார் 3 கோடிப் பேர் வசிக்கும் கானாவில் 17% பேர் செல்பேசி வழியாகப் பணப் பரிமாற்றம் செய்கின்றனர். 91% பேர் அங்கே செல்பேசி வைத்துள்ளனர்.

இந்தியாவில் 2.5 கோடி வியாபாரிகள் உள்ளனர். ஆனால், பண அட்டை தேய்க்கும் இயந்திரங்களை 12 லட்சம் பேர்தான் பயன்படுத்துகின்றனர். அரசுக்கு வரி செலுத்துவதிலிருந்து தப்பிப்பதற்காக வெளிப்படையான பணப் பரிமாற்றங்கள் நடப்பதை வியாபாரிகளில் ஒரு தரப்பினர் விரும்புவதில்லை. இனி மேலும் அத்தகைய மனப்போக்கில் வியாபாரிகளை இருக்க விடாமல் இந்தப் புதிய தொழில்நுட்பம் நெருக்கடி கொடுக்கும். நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அது நல்லது.

அடுத்த தேர்தலில் “ஒரு வாக்குக்கு எத்தனை எஸ்எம்எஸ்ஸு?” என்றும் குரல்கள் கேட்கும் என்று நினைக்கிறீர்களா? அதுவும்தான்.

‘இன்று நகரில் 50 செல்பேசிகளைப் பறித்துப் பல்லாயிரம் ரூபாய் திருட்டு’ என்பது போன்ற செய்திகளை நாளிதழ்களில் வாசிப்பதற்கும்தான் நீங்கள் தயாராக வேண்டும்!
- த.நீதிராஜன்

[from http://tamil.thehindu.com/]