ஒரு குறிப்பிட்ட பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பினால் மட்டும், வண்டி மைலேஜ் குறைவதைக் 'கண்டுபிடித்தேன்'. அடுத்த முறை அங்கு சென்றபோது, வழக்கம்போல பெட்ரோல் நிரப்பும் சிறுவயதுப் பெண், மீட்டரை நான் பார்க்க முடியாதவாறு வெகு இயல்பாய் மறைத்துக்கொண்டு நின்றார். ஏற்கெனவே பாதிக்கப்பட்டவன் என்பதால், சற்று நகர்ந்து மீட்டரைக் கவனித்தேன். 80-ஐ எட்டும் முன்பே பெட்ரோல் நிறுத்தப்பட்டது. நான் சத்தம் போட்டதும், அந்தப் பெண் முறைத்தார். "ஏன்யா பொம்பளைகிட்ட சண்டை போடுற?" என்று ஊழியர்கள் சிலர் முறைத்தார்கள். ஏன் வம்பு என்று பின்வாங்கிவிட்டேன்.
ஆனால், சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன அலுவலகத்துக்கே நேரில் சென்று புகார் சொன்னேன். ஆனால், "அந்த பெட்ரோல் நிலையத்திலேயே ஒரு புகார் நோட்டு இருக்கும் அதில் பதிவுசெய்யுங்கள். அல்லது எங்கள் இணையதளத்தில் பதிவுசெய்யுங்கள்" என்றார்கள், என்னை ஏறெடுத்தும் பார்க்காமல். இரண்டிலும் பதிவுசெய்தேன். எந்த மாற்றமும் நிகழவில்லை.
இந்தியா முழுவதும் கடைவிரித்துள்ள ஒரு பல்பொருள் அங்காடியின் மதுரைக் கிளையில், கிட்டத்தட்ட பாதி விலையில் குளிர்பானங்கள் விற்கப்படுவதைக் கண்டு வாங்கிவந்தால், அவை அனைத்துமே காலாவதியானவை. உழவர் சந்தையைத் தவிர, எந்தச் சந்தையிலும் (மீன் சந்தையிலும்கூட) காய்கறிகளின் விலைப் பட்டியல் இருப்பதில்லை. தக்காளி விலை கிலோ 10 ரூபாய்க்குப் போன தகவல் தெரியாதவன், கால் கிலோவை 10 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு வர வேண்டியதுதான். பேருந்து நிலையங்களில் எல்லாம் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட அதிக தொகைக்குத்தான் பண்டங்களை விற்போம் என்ற உறுதிமொழியோடு செயல்படுகிறார்கள்.
இது சாமானியர் பிரச்சினை என்பதால், யாரும் கண்டுகொள்வதில்லை என்று நினைத்துவிட வேண்டாம். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பலர் ஆசையாய் வாங்கும் கார் நிறுவனங்கள்கூட, வெளிநாட்டில் வாங்கிய விருதுகளைக் காட்டித்தான் இங்கே கார்களை விற்கின்றன. ஆனால், தரத்தில் வெளிநாட்டு உற்பத்திக்கும், உள்நாட்டுத் தயாரிப் புக்கும் எந்தச் சம்பந்தமும் இருப்பதில்லை.
அமெரிக்கா போன்ற நாடுகளில் சேவைக் குறைபாடு என்று புகார் எழுதினால், பழைய பொருளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு புதியது தருவதுடன் நஷ்டஈடும் தருகிறார்கள். மன்னிப்பும் கேட்கிறார்கள். இங்கே பொதுமக்கள் மட்டுமல்ல, ஆட்சியாளர்கள், அதிகாரிகளே கேள்வி கேட்பதில்லை. மேலை நாடுகளில் சில பத்திரிகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனத்தின் பொருட்களையும் பயன்படுத்திப் பார்த்துவிட்டு, அவர்கள் செய்த விளம்பரம் மோசடியானது என்று கட்டுரை எழுதி நிரூபிக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள் நாம் ஏமாளிகள்தானே?
...கே.கே.மகேஷ்
[from http://tamil.thehindu.com]