by பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
ஐஏஎஸ் தேர்வு என்று பரவலாக அறியப்படும் குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு, நடந்து முடிந்து இருக்கிறது. பொதுப் பாடங்கள் மற்றும் திறனறிப் பகுதிகள் என காலையும் மாலையும் நடைபெற்ற இத்தேர்வு, மிகவும் ஆரோக்கியமான போக்கை முன்வைத்து இருக்கிறது. அதிலும் கடந்த 18-ம் தேதி நடந்த தேர்வு, மிகச் சிறந்த முன்னோடியாக அமைந்துள்ளது. மிகுந்த கவனத்துடனும் ஆழ்ந்த அக்கறை யுடனும் வினாக்களைத் தேர்வு செய்தது பாராட்டு தலுக்குரியது.
பொதுப் பாடப் பகுதியில் மொத்தம் 100 வினாக்கள். இவற்றில், நான்கு அல்லது ஐந்து மட்டுமே, பாடம் சம்பந்தப்பட்ட நேரடி வினாக்கள். மற்றவை நடப்பு நிகழ்வுகளுடன் தொடர்புடையதாக இருந்தது. இப்படித்தான் வினாத்தாள் அமைய வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருந்தது. இம்முறை இது நிறைவேறி இருப்பது மிகுந்த மன நிறைவைத் தருகிறது. ‘பாட அறிவின் அடிப்படையில் உலக அறிவு பெறுதல்; வளர்த்துக் கொள்ளுதல்’. இந்த நோக்கம், தெள்ளத் தெளிவாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. ‘காக்கதீய அரசு’ பற்றித்தான் முதல் வினா. சற்றே மனம் தளர்ந்து போகிறது. ஆனால், 'பருவநிலை மாற்றம்’ பற்றிய அடுத்த கேள்வியே இன்ப அதிர்ச்சி தருகிறது. இது, நூறாவது கேள்வி வரை நீள்கிறது.
சுற்றுச்சூழல் மற்றும் தூய காற்று (15) உதட்டுச் சாயம், மென் பானங்களில் ரசாயனம் (23), வேளாண்மையில் தண்ணீர் சிக்கனம் (21), மண் ஆரோக்கியம் (22), சமூக சமத்துவம் (80), தேசிய ஊட்டச் சத்து இயக்கம் (98) பற்றிய கேள்விகள், யுபிஎஸ்சியின் பொறுப்புணர்வைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. தேசிய முதலீடு மற்றும் கட்டுமான நிதியம் (5), தேசியத் திறன் தகுதி (11), தேசிய வேலைவாய்ப்புச் சேவை (13), தாராளமயமாக்கலின் விளைவுகள் (27) , ஜிஎஸ்டியின் பயன்கள் (31), தேசிய வேளாண் சந்தை (58), அறிவுசார் சொத்துரிமை (59), நிதிக் கொள்கைக் குழு (86), பினாமி பரிவர்த்தனை (தடுப்பு) திருத்தச் சட்டம் (95), தொழிற்சாலைச் சட்டம் 1881 (99) என்று அடுக்கடுக்காய் அணி வகுத்து வரும் வினாக்கள், தேர்வு எழுதுகிற இளைஞர்களுக்கு இக்காலப் பொருளாதார அறிவு மிக முக்கியம் என்பதை உணர்த்துகின்றன.
அகன்ற வர்த்தக முதலீட்டு ஒப்பந்தம் (32), உலக வர்த்தக நிறுவனம் (33), சைபர் பாதுகாப்பு (35), வித்யாஞ்சலி திட்டம் (38), 'உன்னத் பாரத் அபியான்' (39), தர நிர்ணயம் (57), சிறு நிதி வங்கிகளின் பயன்பாடு (65), சர்வதேச பாலின இடைவெளி அட்டவணை (84) என உலகப் பிரச்சினைகள் முதல் இந்திய அரசின் திட்டங்கள் வரை, நடப்பு நிகழ்வுகளில் ஆழமாக நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது முதல் நிலைத் தேர்வு. மக்களவைத் தேர்தலில் போட்டியிடத் தகுதிகள் (7), மக்களவை சபாநாயகர் தேர்வு (26), வாக்குரிமை (36), தேர்தல் ஆணையம் (40), மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி (46), சுரண்டலுக்கு எதிரான உரிமை (47), இந்தியக் கூட்டாட்சித் தத்துவம் (50), அடிப்படை உரிமைகள் / கடமைகள் (61) என அரசமைப்புச் சட்டம் தொடர்பான பகுதிகளில் பரிச்சயமான மற்றும் அதிகம் கேள்விப்படாத பகுதிகளை மிக நன்றாக சமம் செய்கிறது வினாத்தாள்.
தற்கால இந்திய அரசியல், சினிமா, விளையாட்டு ஆகிய துறைகளில் இருந்து கேள்விகளே இல்லை. மாறாக, பொருளாதாரம், அரசமைப்பு சட்டம் தரும் உரிமைகள், உலக சுற்றுச் சூழல் பிரச்சினைகள் ஆகியவை அதிகம் தென்படத் தொடங்கி உள்ளன. தெளிவான சிந்தனைக்கு வழி வகுக்கும் விதத்தில், உலகளாவிய பார்வையை ஏற்படுத்துகிற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, வினாத்தாள் அமைக்கப்பட்டிருப்பது நன்கு தெரிகிறது.
மாலை நடைபெற்ற, ‘சி-சாட்’ எனப்படும் திறனறித் தேர்வு வினாத்தாள், பெரும்பாலும் எதிர்பார்த்ததை போலவே அமைந்து இருந்தது. இந்தப் பகுதி, தகுதித் தேர்வு (qualifying test) மட்டுமே. 33% மதிப்பெண்கள் பெற்றால் போதும். மொத்தம் 80 வினாக்கள். 27இல் சரியான விடை தந்து இருக்க வேண்டும்.
(தவறான விடைக்கான ‘நெகடிவ்' மதிப்பெண்ணைக் கணக்கில் கொள்ளவில்லை.)
‘சி-சாட்’ தேர்வுக்கு இரண்டு மணி நேரம். ஆகவே 120 நிமிடங்களில், 30 வினாக்களைத் தேர்ந்தெடுத்து, சரியான விடையைக் கண்டுபிடித்துத் எழுதினாலே, தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம். பொதுப் பாடத் தேர்வுப் பகுதியில், மொத்தம் உள்ள 100 வினாக்களில், 60 கேள்விகளுக்கு சரியான விடை தந்து இருந்தால், முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்று விடலாம் என்றுதான் தோன்றுகிறது.
நிறைவாக, 2017 குடிமைப் பணி களுக்கான (ஐஏஎஸ்) முதல் நிலைத் தேர்வு சொல்லும் செய்தி என்ன? யாரெல்லாம் தொடர்ந்து செய்தித் தாள்களை வாசிக்கிற பழக்கம் வைத்து இருக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் அடுத்த நிலைக்குச் செல்வதை, இத்தேர்வு உறுதி செய்திருக்கிறது.
அடுத்த தலைமுறையினர், பாடப் புத்தகங்களைத் தாண்டிய உலக அறிவு பெறுதலை வலியுறுத்துகிற இந்தத் தேர்வு, ஒரு மிகச் சிறந்த முன்னோடி.
[courtesy : http://tamil.thehindu.com ]
No comments:
Post a Comment