Friday, September 25, 2015

from www.tamil.thehindu.com

இந்த கிரானைட் விவகாரம் நான் சின்னப்பயலா இருக்கும்போது ஆரம்பிச்சுது. இப்ப என் பயலே ‘டி.வி. நியூஸ்’ பாக்குற அளவுக்கு வளந்துட்டான். விவகாரம் முடிஞ்சபாடில்ல.
‘ஏலேய், கிரானைட்டுங்கிறது ரொம்ப உசத்தியான கல்லுடா. அது மட்டும் கிடைச்சா ஒரே பாட்டுல கோடீஸ்வரன் ஆகிடலாம்’னு ‘படையப்பா' மூலமாத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். மதுரைக்கு வந்த பிறகுதான் கிரானைட்டோட இன்னொரு மொகரக்கட்டையைப் பாத்தேன்.
‘குவாரிகள்ல வைக்கிற வெடியில, வீடெல்லாம் கீறிப்போச்சு’ன்னு மேலூர் ஜனங்க கலெக்டர் ஆபீஸ்ல புகார் சொல்றதும், ‘அப்படியெல்லாம் இருக்காதே’ன்னு அதிகாரிங்க பதில் சொல்றதும் தினசரி காட்சியா இருந்துச்சி. கொஞ்ச நாள்ல, ‘கோயில், குளத்தையெல்லாம் குவாரியாக்கிட்டாங்க பாவிங்க’, ‘படியளந்த புஞ்சையைப் பறிச்சிட்டாங்க சாமி’ன்னு கூக்குரல்கள் அதிகமாகிட்டே போச்சு. ‘ஆஹா!’ அப்படியான்னு புருவத்தை உயர்த்திக் கேட்டுக்கிட்டாக அதிகாரிக.

போலீஸுக்குப் போனா பிராது கொடுத்தவங்க மேலயே பொய் கேஸ் போட்டாங்க. (பிஆர்பி பழனிச்சாமி ஊர்ப் பேரும் பிராதுக்காரன்பட்டிதான்) போலீஸை நம்பாம நேரடியா கோர்ட்டுக்குப் போனவங்க, அங்க கேஸ் கட்டே காணாமப் போனதும் டரியலாகிட்டாங்க.
இந்தச் சமயத்துலதான் பழனிச்சாமியின் சொந்த மகன் திருமணம் மதுரை குலுங்கக் குலுங்க நடந்துச்சி. நகைக்கடை பொம்மை மாதிரி பொண்ணுக்கு நகை போட்டு, ஃப்ளக்ஸ் வைக்கிற செல்லூர்க்காரய்ங்களே மெரண்டுட்டாய்ங்கன்னா பாத்துக்கோங்க.

‘இனிமே எல்லாம் இப்படித்தான்’னு அவங்க சொல்லிக்கிட்டு இருக்கும்போது, திடீர்னு முருகேசன்னு ஒருத்தரு மேலூர்ல இருந்து கிளம்புனாரு. ‘2004 மார்ச்ல இருந்து 2008 மார்ச் வரைக்கும் அவங்க தோண்டியெடுத்த கிரானைட் கல்லுக எவ்வளவு?, அதே காலகட்டத்துல அவங்க வெளிநாட்டுக்கு ஏத்துன கல்லுக எம்புட்டு?’ன்னு விவரங்களைத் திரட்டிக்கிட்டு ஐகோர்ட் படியேறினாரு. நல்லவேளையா, அந்த வழக்கு நீதிபதி சந்துருகிட்ட விசாரணைக்குப் போச்சு. “இந்த நாட்டின் குடிமகன் ஒருவன், ஒரு ஏமாற்று வேலையை, மோசடியைக் கண்டுபிடித்து அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவருகிறபோது, அதை மதிப்புமிக்க வரமாக அவர்கள் பாவிக்க வேண்டும். உடனடியாக உண்மையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”ன்னு உத்தரவு போட்டாரு.

ஆனா, புகார்ல சொன்னதுபோல எந்த முறைகேடும் நடக்கவே இல்லைன்னு 29.5.10-ல் கலெக்டர் ஆய்வறிக்கை கொடுத்துட்டாரு. அது போதாதா? அய்யா பழனிச்சாமியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாக 10 லட்ச ரூபாய் நஷ்டஈடு கேட்டு முருகேசன் மேல மானநஷ்ட வழக்கு போட்டுட்டாங்க.

ஒரு தினசரி பத்திரிகையில கிரானைட் ஊழலைப் பத்தித் தொடர் எழுதின குற்றத்துக்காக, ஆசிரியரையும், சிறப்புச் செய்தியாளரையும் அதிகாலை 4 மணிக்கு வீடுபுகுந்து தூக்குச்சி போலீஸ். ‘ஆத்தாடி...’ அப்படின்னு மறுபடியும் எல்லாரும் கப்சிப் ஆயிட்டாங்க.

எப்பவும் காத்து ஒரே பக்கமா அடிக்காது இல்லியா? கிரானைட் மாபியாக்களோட கெட்ட காலம், 2011 மார்ச்ல மதுரை கலெக்டரா சகாயம் வந்துட்டாரு. திருமங்கலம் வித்தைய அண்ணன் அழகிரி, சட்டசபைத் தேர்தல்லயும் காட்டிறக் கூடாதுன்னு தேர்தல் கமிஷன் அனுப்பிவெச்சவருதான் சகாயம். வந்த வேலையைக் கச்சிதமா முடிச்சவரு, கிரானைட் பக்கம் திரும்பிட்டாரு.

மதுரை மாவட்டத்துல 16 ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் கொள்ளை நடந்திருக்குன்னு பெரிய அறிக்கை தயார் பண்ணி அரசுக்கு அனுப்பிட்டு, உத்தரவுக்குக் காத்திருந்தாரு. நாலே நாள்ல ‘உத்தரவு’ வந்துச்சி. ‘உங்களை மதுரையில இருந்து தூக்கி கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநரா போட்டுட்டோம்’னு.

அடுத்து வந்த கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, இன்னும் வேகமானவரு. 18 குழுக்களைப் போட்டு 175 குவாரிகளையும் ஆராய்ஞ்சவரு, 1 லட்சத்து 62 ஆயிரம் கிரானைட் கற்களைப் பறிமுதல் செஞ்சாரு. ஒவ்வொரு கல்லும் பழைய மகேந்திரா வேன் சைஸ்ல இருந்துச்சி. ஒண்ணுக்கு மேல ஒண்ணா கிடந்த இந்த கல்லுகளை எல்லாம் இன்ச் டேப் வெச்சி அளந்து, மதிப்பீடு செஞ்சுட்டு, ‘பறிமுதல் செஞ்ச கற்களோட மொத்த மதிப்பு 40 ஆயிரம் கோடிக்கு மேல இருக்கும்… ஏலத்தை எப்ப வெச்சுக்கலாம்?’னு மேலிடத்தைக் கேட்க ஆரம்பிச்சாரு. தன் வாழ்க்கையிலயே மோசமான காலகட்டத்தை பழனிச்சாமி சந்திச்சது இப்பதான். அவர் மேல 30-க்கும் அதிகமான வழக்கு பாஞ்சுது. அவரைப் பிடிக்க 7 தனிப்படை தீயா வேலை செஞ்சுது. வேற வழியில்லாம 2012 ஆகஸ்ட்ல எஸ்.பி. ஆபீஸ்ல சரணடைஞ்சார். அவரைத் தூக்கிப் பாளையங்கோட்டை ஜெயில்ல போட்டாங்க. 100 நாளுக்குள்ள அத்தன வழக்குலயும் ஜாமீன் வாங்கிட்டு சிறை மீண்ட சிங்கமாய் வெளியே வந்துட்டாரு.

கிரானைட் ஏலத்தை இணையம் மூலம் உலகளாவிய அளவில் நடத்தத் திட்டமிட்டிருந்த அன்சுல் மிஸ்ராவை மதுரையில இருந்தே தூக்கிட்டாங்க. ஒன்றரை வருச உழைப்பை நாலஞ்சு மாசத்துல கொடுத்த அந்த மனுஷனோட மனநிலை எப்படியிருந்திருக்கும்?

போலீஸ்ல சிக்கின ஓட்டை பைக்க மீட்கும் முன்னாடி, ஸ்டேஷனிலேயே அத இத்துப்போக வெச்சிருவாங்க. ஆனா, தொழிலுக்குப் பயன்பட்ட பல கோடி மதிப்புள்ள கிரேன்கள், டிப்பர் லாரிகள எல்லாம் ‘கெட்டிக்காரத்தனமா’ அவங்க மீட்டுட்டாங்க. பழையபடி குவாரி தோண்டுறதுக்கும், கிரானைட்டை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்றதுக்கும் அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்துல வழக்கு தொடர்ந்தாங்க.

இனிமே அவ்வளவுதான்னு நினைச்ச நேரத்துலதான் ‘சர்வரோக நிவாரணி’ அய்யா டிராஃபிக் ராமசாமி என்டர் ஆனாரு. கிரானைட் முறைகேடு பத்தி விசாரிக்கணும்னு அவர் போட்ட வழக்குதான், சகாயத்தை சட்ட ஆணையராக்கி திரும்பவும் மதுரைக்கு அனுப்புச்சி. ‘மறுபடியும் முதல்ல இருந்தா’ன்னு சொல்லாம… ரொம்ப ஆர்வமா 2014 டிசம்பர் மாசம் குவாரிக்குள்ள நடக்க ஆரம்பிச்சாரு சகாயம். போலீஸ் புறக்கணிச்சாலும்கூட, நரபலி புகாரில் உண்மை இருக்குதான்னு கண்டுபிடிச்சே தீருவேன்னு அடம்பிடிச்சாரு. அவர் சுடுகாட்டிலேயே ராத்தங்கிய பிறகு, வேண்டா வெறுப்பா தோண்டின போலீஸ், 8 எலும்புக்கூட்டை எடுத்திருக்கு.

ஒரு வருசமா திரட்டிய தகவல்களை எல்லாம் அக்டோபர் 15-ம் தேதி கோர்ட்ல அறிக்கையா தாக்கல் செய்யப்போறார் சகாயம். அந்த அறிக்கையை வெச்சு கோர்ட் என்ன உத்தரவு போட்டாலும் அதைச் செய்யுற பொறுப்புல மறுபடியும் அதே அதிகாரிங்கதான் இருக்காங்கன்னு நினைக்கும்போது, எனக்கு தலை கிர்ருன்னு சுத்துது.

கிரானைட் கொள்ளையர்கள் மேல எந்த நடவடிக்கையும் இருக்காதுன்னு சொல்லல. நடவடிக்கை இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்ல வர்றேன். அவங்க தோண்டிப்போட்ட ஆறு, குளம், கால்வாயை எல்லாம் மூடி, விவசாயத்துக்கு ஏத்த மாதிரி செம்மைப்படுத்த எப்படியும் கொஞ்ச காலம் ஆகலாம். அதுக்குள்ள என் பேரனுக்கு நியூஸ் பார்க்கிற வயசு வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல.

- கே.கே.மகேஷ், 

No comments:

Post a Comment