Thursday, January 14, 2016

From www.tamil.thehindu.com

அன்புள்ள 'பீட்டா' தோழர்களுக்கு...

விலங்குகள் மீது நீங்கள் அன்பு செலுத்துவதாலேயே உங்கள் மீது எனக்கு அன்பு பெருக்கெடுக்கிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டு, ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பு முதலான வேர்களின் ஆழம் அறியாது, போட்டி நடைபெறும் அந்த ஒற்றை தினத்தில் சில கணிப்புகளையொட்டி நீங்கள் எடுத்துவரும் முன்னெடுப்புகள் ஒருபுறம் இருக்கட்டும். உங்களிடன் எனக்குப் பகிர்வதற்கு சில சொந்த அனுபவங்கள் உள்ளன.

எனக்கும், நான் பிறந்த ஊருக்கும், வளர்ந்த ஊருக்கும் இப்போது வாழும் ஊருக்கும் ஜல்லிக்கட்டுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.

பொங்கல் பண்டிகையில் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னம்பட்டியில் எருதாட்டம் என்ற பெயரில் வீதிகளில் கோமாளி ஒருவர் ஓட அவர் பின்னே சீற்றத்தோடு ஓடும் காளைகளை மிரட்சியோடு பார்த்ததுதான் என் ‘ஜல்லிக்கட்டு’ அல்லது ‘எருதாட்ட’ அனுபவம்

காலம் காலமாய் வளர்த்த காளைகளும், எருதுகளும் கிட்டத்தட்ட எங்கள் பகுதிகளில் அற்றுப்போன நிலையில், பாலுக்காக கலப்பின மாடுகள் பெருமளவில் நிரப்பப்பட்ட நிலையில், அறிவியல் வளர்ந்த(!) நிலையில், உலகமே உள்ளங்கைக்குள் அடங்கிவிட்ட நிலையில்.... ''போயும்.. போயும் மாட்டை விரட்டிவிட்டு அதன் மேல் கும்பலாகப் பாய்ந்து, சில நொடிகள் பிடித்து விட்டதை வீரம் என நினைத்துக்கொள்ளும்'' ஜல்லிக்கட்டு தேவைதானா எனும் பெயரளவிலான அறிவார்ந்த(!) கேள்வி எனக்கும் இல்லாமல் இல்லை.

எனக்கு உண்மையில் ஜல்லிக்கட்டின் வரலாறு மற்றும் புவியியல், விலங்கு நேயர்களின் காருண்யம் குறித்தெல்லாம் பெரிய அறிவு கிடையாது.

எருமைகளின் இயல்பும், மாடுகளின் இயல்பும் பல்லாண்டுகளாக அவைகளை வளர்த்து, தீனி போட்டு, காலை நேரக் குளிரில் சாணி அள்ளி, தவிடு புண்ணாக்கு தாழிகளில் போட்டு, அவ்வப்போது பருத்திக்கொட்டை ஆட்டி ஊற்றி என பக்குவம் செய்ததோடு, அவைகளுக்கு அண்ணாங்கால் போட்டு காடு மேடுகளில் பல வருடங்கள் மேய்த்த அனுபவம் உண்டு.

பொதுவாக அவை யாவும் விலங்குகள் என்ற முறையில் மட்டும் அன்பும் அக்கறையும் செலுத்தப்பட்டதில்லை. விவசாயிகளின் குடும்பத்தில் அவையும் ஒரு அங்கம், அந்த வீட்டில் அது ஓர் உறவு. அவற்றின் பெயர்கள்கூட ஜிம்மி, பப்லு, பிங்கி, ஷங்கி என்றெல்லாம் இருக்காது. காளை (அ) மாடுகளுக்கு சின்னவன், பெரியவன், கருவாயன், வெள்ளையன், செவள என்றோ எருமைகளுக்கு கோணக்காலி, வெள்ளச்சி, பெரிய கெடா, வவுரி, சப்பக்காலி, காட்டேரி என்றோ அதனதன் இயல்புகளுக்கேற்ப, அவர்கள் புழங்கும் மொழியில் உரிமையாக, கிண்டலாகப் பெயர் சூட்டப்பட்டிருக்கும்.

ஒரு கட்டத்தில் காலம் காலமாக நாங்கள் வளர்த்த நாட்டு மாடுகள் எப்படியோ குறைந்துபோய், உயரம் குறைந்த, சற்று நீளமான, வயிறு தொங்கலான சிந்து மாடுகள் என்றொரு வகை கட்டுத்தரைகளில் வந்து இறக்குமதியாகின. நாட்டு மாடுகள் முக்கி முக்கி மூன்று படி கறந்த இடத்தில் இவை எட்டுப் படி என தாராளம் காட்டின. ஆனால் நாட்டு மாட்டுப் பாலின் ருசிக்கு பக்கத்தில்கூட சிந்து மாட்டுப் பாலின் ருசி வரவில்லை. ''பாலு என்ன பாலு, நம்ப மாடு (நாட்டு மாடு) போடற சாணி வாசத்துக்கு பக்கத்துல நிக்க முடியுமா அந்த மாடு எருவற சாணி'' என்பார் எங்கள் கிராமத்தில் ஒருவர்.

ஆனாலும் கூட... ஃபேஸ்புக்கில் ஆங்க்ரிபேடு விளையாடத் தெரியாத, பாஃர்ம் வில்லாவில் விவசாயம் செய்யத் தெரியாத, உலகில் எந்த நல்ல மாற்றங்கள் நடந்தாலும் அது எவ்விதமும் தங்களை எட்டாதது குறித்து அலுப்பில்லாமல் வாழும் ஒரு கூட்டம் இருக்கின்றது. அவர்கள் இன்றும் தங்களிடம் இருக்கும் கொஞ்சம் நிலத்தை உழுவதற்காகவோ, என்னதான் ட்ராக்டரில் உழுதாலும் குட்டக் கலப்பையோ, கொத்துக் கலப்பையோ போட்டு மண்ணைக் கிளர்ந்து ஒரு உழவு ஓட்டிடனும் என கூப்பிடுவார்கள் என்ற நம்பிக்கையில் காளைகளை / எருதுகளை கொஞ்சம் நம்பிக்கையோடு வளர்த்து வருபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதோ ஈரோடு நகரத்துக்குள் குட்டியானை எனச் சொல்லப்படும டாடா ஏஸ் வண்டிகள் வந்து குவிந்த பின்னும் கூட, இன்னும் ஜவுளிக் கடைப் பகுதிகளில் ஒற்றை மாடு பூட்டிய வண்டிகள் ஓரளவு இருக்கத்தான் செய்கின்றன.

அவசர வாழ்க்கையில் விரைகின்றவர்களுக்கு, சாலைகளில், வீதிகளில் ஆடி அசைந்து போகும் மாட்டு வண்டிகள் எரிச்சலை உண்டாக்கத்தான் செய்கின்றன. சில நேரங்களில் அவ்வண்டிகளால் போக்குவரத்து நெரிசல்கூட ஏற்படுகிறது. சாலைகளில் சாணம் போட்டுவிடுகின்றன. ''இன்னும் ஏன் தான் இவுங்க முன்னேறாம இருக்காங்களோ!? அதான் சின்னச் சின்னதா வண்டி வந்திருக்கே… வாங்கி ஓட்ட வேண்டியதுதானே… இவங்களால ட்ராபிக் ஆவுது… பெரிய இடைஞ்சலா இருக்கு'' என நாட்டை எடுத்து நிமிர்த்தி வைக்க ஓடுபவர்களுக்கு ''அந்த வண்டிகள் ஒருபோதும் பெட்ரோல் பங்குகளில் வந்து டீசல் பிடிக்க நிற்பதில்லை என்பதும், டெல்லி போல ஒற்றை, இரட்டை இலக்க வாகன இயக்கப் பரிசோதனைக்குள் ஆட்பட்டு மாசுக் கட்டுப்பாட்டுக்கு முடங்க வேண்டிய அவசியமில்லை'' என்பது தெரியுமா எனத் தெரியவில்லை.

ஆகவே இனியும் உழவுக்கும், பாரம் இழுக்கவும் எருதுகளே வந்துவிடும் என்றெல்லாம் சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால், எல்லாம் சுழற்சியில்தான் வருகின்றன.

ஒரு காலகட்டத்தில் காட்டில் கடலை விதைத்து, அறுவடை செய்து, உரித்து, மாடு பூட்டப்பட்ட செக்கில் கொடுத்து ஆட்டி எடுத்த கடலை எண்ணெய் தான் பயன்படுத்திக்கொண்டிருந்தோம். யாரோ எவ்விதமோ கடலை எண்ணெய் கொழுப்பு நிறைந்தது எனக் கிளப்பி விட்டார்கள். பனை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய் என ஏதேதோ எண்ணெய்கள் பயன்பாட்டுக்கு வந்தன. அவைகளின் வாயிலாக அவை சார்ந்த நிறுவனங்கள் கொழுத்தன. அதையனைத்தையும் தாண்டி மீண்டும் கடலை எண்ணெய்தான் வேண்டும், அதுவும் மரச்செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்தான் வேண்டும், விலை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை எனக் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதேதான் நாட்டுக்கோழி முட்டைகளிலிருந்து பண்ணைக்கோழிக்கு மாறிவிட்டு மீண்டும் எவ்வளவு காசு ஆனாலும் நாட்டுக்கோழி முட்டை கிடைக்குமா என்பதும். இதுபோல் ஒவ்வொன்றிலும்.

சரி இந்த சுழற்சிகளுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு என நினைக்கலாம். காலம்காலமாக மாடு கன்று ஈன்றால், அது பெண் கன்றாக இருந்தால் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வார்கள். ஆண் கன்றாக இருந்தால் சிலர் காளையாக பின் காயடித்து எருதாக மாற்றி, பயன்படுத்த வைத்துக்கொள்வார்கள். இல்லாவிடில் காளைக்கன்றை விற்றுவிடுவார்கள். அப்படியாக தப்பிப்பிழைத்த காளைதான் அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து பசுமாடுகளுடனும் இணை சேர்ந்து பிள்ளை வரம் கொடுக்கும். அந்தக் காளையின் பயன்பாடு பசுக்களோடு இணை சேர்வது அல்லது எருதாக உழவுக்கும், வண்டிகளிலும் பயன்படுவது.

அப்படியாக வளர்க்கப்பட்ட காளைகளைத்தான் தெற்கத்திச் சீமைகளில் விளையாட்டில் பயன்படுத்தி வந்திருக்கலாம் அல்லது வருகின்றனர். உண்மையில் பசுக்களுக்கு இணை சேர்க்காமலே செயற்கைக் கருவூட்டல் மூலம் 150 ரூபாய்க்கு ஊசி போட்டு வேறொரு இனத்தை விதைத்து கொஞ்சம் கொஞ்சமாக அதன் பரம்பரையைக் குழப்பி இப்போது என்ன வகை மாடு வளர்த்துகிறோம் என்றே தெரியாமல் வளர்த்துகிறோம். உழவுக்கும், வண்டி இழுப்பதற்கும் காளைகளைப் பயன்படுத்தாத இச்சூழலில், பாரம்பரிய இன மாடுகளை அழித்துவிடாமல் தொடர்ந்து வளர்த்துவதற்கு, அதற்காக காளைகளை வைத்து பராமரிக்க அந்தப் பகுதியில் ஜல்லிக்கட்டு அவசியமான ஒரு காரணமாக நான் எடுத்துக்கொள்கிறேன்.

யாரோ எங்கோ மாடுகளுக்கு சாராயம் புகட்டியிருக்கலாம், அடித்து கொடுமைப்படுத்தியிருக்கலாம். அதுவே பொதுவான நடைமுறையாக ஆகாது. உழவிலும், வண்டியிலும் இழுக்காத மாட்டை அடிக்கும் அதே உரிமையாளன்தான், கட்டுத்தரையில் பாராட்டிச் சீராட்டி கட்டியணைத்து நிற்பான். அடுத்து… தன் மண்ணில்… தான் ஆண்டு முழுதும் சீராட்டி, தாலாட்டி, பழக்கி வளர்த்தும் மாடுகளோடு, ஒரு நாள் ஓடவிட்டு திமில் பிடித்து சில நொடிகள் நிற்கும் விளையாட்டையெல்லாம் தடுக்க விஷமத்தனத்தோடு வருபவர்கள்…. செயற்கைக் கருவூட்டலிலியே பிறந்து, தன் வாழ்நாளில் உடலுறவின் சுகமே காணாமல், செயற்கை கருவூட்டலிலேயே கருத்தரித்து, கன்று ஈன்று, இயந்திரம் உறிந்துகொள்ள மடி கொடுத்து, எல்லாக் கொடுமைகளிலும் அமைதி காத்து, இயற்கை மேய்ச்சலை மறந்து வருடம் முழுவதும் இன்பமற்று, இலக்கற்று நிற்கும் பண்ணைகளில் விலங்குகளுக்கு நேயம் பேணிவிட்டு, தினவோடு ஆகிருதியாய் பாயும் காளைகளிடம் காருண்யம் காட்ட வரட்டும்.

இவ்வாறான ஒவ்வொரு முடக்கத்திற்குப் பின்னும், ஒவ்வொரு விரிவாக்கத்திற்குப் பின்னும், பலரின் வேர்கள் அவர்கள் அறியாமலே ஆழத்தில் மௌனமாக அறுக்கப்பட்டுவிடுகின்றன. அறுக்கப்படும் போதெல்லாம் ஏதோ ஒன்று கவர்ச்சியாகக் காட்டப்பட்டு அல்லது மிரட்டப்பட்டு ஒடுக்கிவிடுகிறார்கள்.

தன் வேர் அறுந்தது தெரியாமல் தலையாட்டிக்கொண்டே அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தம் ஜீவனை இழந்து கொண்டேயிருப்பார்கள். வேர் அறுந்த சமூகம் வீழ்ந்து தன்னை முழுவதும் இழந்தபின்பு அதே இடத்தில் வேறொரு விதை ஊன்றப்படும். அது விஷம் பரப்பும் மரமாகவும் இருக்கலாம்… ஆனால் அவ்வாறெல்லாம் தெரியா வண்ணம் அது பளபளப்பாகவும், அழகூட்டப்பட்டதாகவும், சுவையும் சுகமும் தருவதாகவும் கூட இருந்து தொலைக்கும்!

பீட்டா தோழர்களே... மீண்டும் சொல்ல விழைகிறேன்... விலங்குகள் மீது நீங்கள் அன்பு செலுத்துவதாலேயே உங்கள் மீது எனக்கு அன்பு பெருக்கெடுக்கிறது!

உங்களைப் போலவே விலங்குகளை நேசிக்கும்,

உள்ளூர்க்காரன்
| ஈரோடு கதிர் - தொடர்புக்கு kathir7@gmail.com |

No comments:

Post a Comment