பலரும், அலுவலகத்தில் பல மணி நேரம் தேமேன்னு உட்கார்ந்து வேலை செய்வார்கள் இல்லைன்னா வேலை செய்ற மாதிரியே பாவ்லா பண்ணிக்கிட்டு இருப்பாங்க.
இன்னும் சிலர் இருக்கிறார்கள்.. அவங்க ஸ்டைலே தனி.. அலுவலக நேரத்தில் எல்லாம் காத்தாடி உட்டுட்டு, ஓவர் டைம்ல மட்டும்தான் ஒர்க்கே பண்ணுவாங்க…
என்னப்பா கிளம்பலையான்னு கேட்டா, இல்ல.. வேலை இருக்கு, முடிக்கணும் பொறுப்பா பதில் சொல்லி மத்தவங்க காண்ட அண்டாவுல கொட்டிக்குவாங்க.
இதில், சிலர் காலை முதல் இரவு வரை அலுவலகத்திலேயே தவம் இருந்து பாஸிடம் வரம் வாங்க காத்திருப்பது போல இருப்பார்கள்.
ஒரு சிலர், அலுவலகத்தில் ரொம்ப நேரம் இருந்தா… இவன் ரொம்ப நல்லவன்டான்னு எல்லாரும் சொல்லுவாங்கன்னு தப்புத் தப்பா கணக்கு போட்டு வச்சிருப்பாங்க.
எது எப்படின்னாலும், அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் செய்வது தப்புதான் தப்புதான்.
எப்படி அது தப்புன்னு சொல்ல முடியும்னு நீங்க ஆதங்கத்தோட கேக்குறது புரியுது… அதுக்கு எங்க கிட்ட விலாவரியா தகவல் இருக்குங்க…
வாங்க பாக்கலாம்,
வேலை என்பது முடிந்து விடும் விஷயமல்ல, எல்லா வேலையும் ஒரே நாளில் உங்களால் முடிக்க முடியாது. அதில்லாம.. எல்லா வேலையையும் இன்னிக்கே முடிச்சிட்டா நாளைக்கு வந்து என்னப் பண்ணுவீங்க பாவம்…
அப்புறம், உங்களது வேலையை விட உங்களது குடும்பத்தாரும், குடும்ப உறுப்பினர்களும்தான் முக்கியம். அவர்களுடன் நேரத்தை செலவிடுவது அவசியமும் கூட.
உங்களுக்கு வேலையில எதான பிரச்னைன்னா ஆறுதல் கூறவும், ஆதரவு தரவும் குடும்பம் இருக்கும். ஆனா, உங்க மனைவி கோச்சிக்கிட்டு போயிட்டா பாஸ் வந்து சமைச்சிப் போட மாட்டார்.
குடும்பமே இல்லை சார்.. நான் தனியா இருக்கேன்னு ஒருவர் அங்கிருந்து குரல் கொடுத்தா அவங்களுக்கும் தனியா நோட்ஸ் போட்டு வச்சிருக்கோம்.. வாங்க சொல்றோம்..
வாழ்கை என்பது வெறும் பணி மட்டும் அல்ல. வேலைக்கு போறதும், இரவில் கிளம்பி சாப்பிட்டுட்டுப் போயி ரூமில் படுத்துக் கொண்டு அறையில் இருக்கும் கொசுக்களுக்கு ரத்த தானம் செய்துவிட்டு, குறட்டை சத்தத்தால் இம்சையும் கொடுப்பதல்ல.
வாழ்க்கை வாழ்வதற்கு, குடும்பமே இல்லையே எப்படி வாழுறதுன்னு கேக்காதீங்க.. எத்தனையோ பேர் சமூக அக்கறையோடு வாழ்கிறார்கள். அதுபோல சமூகத்தில் உங்களின் தேவை தேவைப்படும் பலரும் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேடிச் சென்று உதவுங்கள். இது அவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவியல்ல.. உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் பேருதவி.
எல்லாமே சரி..
நான் ஆபிஸ்ல ரொம்ப நேரம் உட்கார்ந்து டபுள் பிரமோஷன் வாங்கினேன் தெரியுமான்னு சொல்றவங்களுக்கு… சிம்பிள் லாஜிக் மேட்டர் ஒண்ணு.
என்னன்னா.. ஆபிஸ்ல ஒருத்தர் ரொம்ப நேரம் வேலை செய்றார்னா.. அவருக்கு கொடுத்த வேலையை, கொடுத்த நேரத்தில் முடிக்க தெரியலைன்னு ஊரே பேசுமே அத பத்தி யோசிச்சீங்களா…
இல்ல, உங்க ஒருத்தருக்காக.. ஆபிஸ்ல இருக்குற ஏசி, லைட், டீ மெஷின்னு எல்லாமே இயங்கி தேவையில்லாம செலவு அதிகமாகிட்டு இருக்கே அதப்பத்திதான் யோசிச்சீங்களா…
எல்லாவற்றையும் விட மன்னிக்கவே முடியாத குற்றம் என்னன்னா.. பொறுப்பா ஒருவன் வேலை எல்லாம் செஞ்சிட்டு, குடும்ப பொறுப்பை சுமக்க சரியான டைமுக்குக் கிளம்புவான். அவனை டீம் லீடர் மொறைக்கிறதுக்கும் காரணமா இருந்துடுவாங்க.. இதனால, உங்க டீம்ல இருக்க எந்த செட்டுக்கும் உங்கள புடிக்காம போறதுக்கும் நிறைய வாய்ப்பு இருக்கு…
இப்படி எதையும் யோசிக்காம… கிணத்துல போட்ட கல்ல்ல்லு மாதிரி வேலை செய்றத விட்டுவிட்டு, வீட்டுக்குப் போனால், அம்மாவுக்கு காய்கறி வாங்கித் தரலாம், பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலாம். மனைவிக்கு காய்கறி நறுக்கித் தரலாம். இதெல்லாம் என்னால செய்யவே முடியாதுன்னு கையை தூக்குறவங்க.. வெட்டியா வீட்டிலே உட்கார்ந்து டிவியயாவது பார்த்து.. இவன் வீட்ல ஏன்டா இருக்கான்னு மத்தவங்க நிம்மதியையாவது பறிக்கலாம்.
என்ன நாங்க சொல்றது தப்பில்லையே…
....Vaanisree Sivakumar.
(Courtesy : Dinamani)
No comments:
Post a Comment