Wednesday, October 28, 2015

from tamil.thehindu.com

உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?’ன்னு ஒரு அம்மணி மைக்கோட அதிரடியா வர்றத டி.வி.யில பார்த்திருப்பீங்க. அதேமாதிரி, ‘உங்க சாப்பாட்டுல பீப் இருக்கா?’ன்னு கேட்டு ஒரு கும்பல் வீட்டுக்குள்ள நுழைஞ்சிடுமோன்னு பயமா இருக்கு, நாட்டு நடப்பைப் பார்க்கும்போது.

அதுக்கு முன்னாடி, நம்ம வீட்ல யார் யார் என்னென்ன சாப்பிடுவாங்கன்னு கொஞ்சம் யோசிங்க. ஒருத்தருக்கு கத்தரிக்கா பிடிக்காது. இன்னொருத்தருக்கு பாகற்காயைப் பார்த்தாலே குமட்டும். சில பேரு உப்புமான்னு சொன்னாலே உதைக்க வந்துடுவாங்க.

எங்க வீட்ட எடுத்துக்கிட்டா, சுப்பையா தாத்தா சைவம். தேனம்ம பாட்டிக்குக் கருவாடுன்னா உசிரு. அப்பா வுக்குக் கருவாடும் நாட்டுக்கோழியும்தான் ரொம்பப் பிடிக்கும். மீனை வெச்சா எந்திரிச்சி ஓடிடுவாரு.

அம்மாவுக்கு அயிரை மீனும் ஆட்டுக்கறியும்தான் இஷ்டம். கோழிக்கறிய தொட்டுற மாட்டாவ. கேட்டா, “ச்சேய்! அது எதையெல்லாம் திங்குது தெரியுமால? பன்னிக்கும் அதுக்கும் என்ன வித்தியாசம் சொல்லு?”ன்னு திருப்பிக் கேப்பாவ.

பெரியக்காவுக்கும் கோழி ஆகாது. சின்னக்காவுக்கு பிராய்லர் கோழியும் ஆட்டெலும்பும் உசிரு. என் மனைவியோட சாப்பாட்டப் பத்தி சபையில சொல்றது எனக்கு நானே வெச்சுக்கிற ஆப்பு. எனக்குக் கருவாடு ஆகாது. ஆனா, சின்ன வயசுல பசங்களோட சேர்ந்து எலிக் கறி தின்னிருக்கேன். என்னையும் எங்க அண்ணனையும் அனைத்துண்ணின்னு சொல்லலாம். எங்க சாப்பாட்டுல்ல ‘பீப்’ இருக்கு. என் மவன் நண்டு திங்கிற அழகே அழகு. “பாம்பு திங்கிற ஊருக்குப் போனா நடுத் துண்டம் எனக்கு”ன்னு கேட்டுத் திங்கற பய.

விஷயத்துக்கு வருவோம்… ஒரு குடும்பத்துக்குள்ளயே சாப்பாட்டு விஷயத்துல இத்தனை முரண்பாடு இருக்கும்போது, நாட்டுல இருக்காதா? அப்புறம் ஏன் புரட்சி போராட்டம்னு ‘சீப்பாய்’ கலகம் பண்றீங்க?

நன்றிப் பெருக்கும் எச்சிப் பெருக்கும்
ஆஹா, இவன் ‘மாட்டுக்கறி விருந்து’ல கலந்துக்கிற ஆளுபோலன்னு சட்டுன்னு முடிவுக்கு வந்திறாதீங்க. பத்து வருஷமா மாடும் மாடு சார்ந்த இடத்துலேயும் வாழ்ந்தவன் நான். என் கண்ணு முன்னாடி நடந்த பசு பிரசவத்துல பொறந்த பயதான் சின்னக்கண்ணன். சேட்டைக்காரனா இருந்தாலும், எம்மேல அவனுக்குத் தனிப் பாசம். எனக்கும்தாம். பள்ளிக்கோடம் விட்டு வரும்போதே, ஒரு குத்து பசும்புல் கொண்டாந்து அவனுக்கு வூட்டுன பிறகுதான் விளையாடவே போவேன்.

கொஞ்சம் வளந்ததும் அவனையும் மேச்சலுக்கு அனுப்புனாவ பெரியம்ம. மாடுகள மேயவுட்டுட்டு, கருவமர நெழல்ல உக்காந்து சாணி வண்டு, குழிநரிப் பூச்சியோட வெளையாண்டுக்கிட்டு இருந்தேன். சின்னக்கண்ணன் ஒரு மாதிரி கத்துனான். அழுவுற மாதிரி இருந்துச்சி. பதறிப் பக்கத்துல போனா, தலைய ஒரு மாதிரி சிலுப்பிக்கிட்டு, வலது காலத் தூக்கித் தூக்கிக் காட்டுனான். பூச்சி எதுவும் கடிச்சிருக்குமோன்னு பயம். கவனிச்சிப் பார்த்தப்பதான் தெரிஞ்சுது, அவனோட கால்ல பெரிய நீர்க்கருவ முள்ளு குத்தியிருக்குதுன்னு. அத எடுத்துவுட்டதும், அவன் மூஞ்சியில சந்தோஷத்தப் பாக்கணுமே. என்னைய நக்கி எடுத்து, நன்றிப் பெருக்க எச்சிப் பெருக்கா ஆக்கிட்டான்.

அடுத்த பத்தாவது வருஷம், ராமநாதபுரத்துல ஒரு ஆபீஸ்ல வேலைக்குச் சேர்ந்தேன். காலையில 9 மணியில இருந்து ராத்திரி 11 மணி வரைக்கும் வேலை. ராத்திரியும் அங்கேயே தங்கிறணும். வார லீவும் கெடையாது. சம்பளம் வெறும் 1,500 ரூபா. செகண்ட் ஷோ சினிமா, வாரப் புத்தகம் படிக்கிறதுதாம் ஒரே பொழுதுபோக்கு. மிச்சக் காச வெச்சி மாசத்துக்கு 90 தடவ ஓட்டல்ல சாப்பிடணும். பிளாட்ஃபாரக் கடையில சாப்பிட்டாலும், வயித்துக்கும், பர்சுக்கும் பற்றாக்குறை வந்திடும்.

மறக்க முடியாத பிஸ்மி
காலையில இட்லி. மத்தியானம் லெமன் சாதம், தயிர் சாதம். ராத்திரி மறுபடியும் இட்லி, தோச. இருவத்தோரு வயசுப் பய இப்படி அரைப் பட்டினி கெடந்தா எப்படியிருக்கும்? புரோட்டோ திங்க நாக்கு துடியா துடிக்கும். கடைக்குப் போனா, அப்படியே ‘சிக்கன் 65’ திங்க ஆசை ஆசையா வரும். காசு இருக்காது. அப்பதான் பிஸ்மி கடையைக் கண்டுபிடிச் சேன். 20 ரூபாய்க்கு ‘பீப் 65’ தருவாங்க. சும்மா பஞ்சு மாதிரி இருக்கும். என் பசிப்பிணி போக்கிய பிஸ்மி கடையைச் சாகும் வரை என்னால மறக்க முடியாது.

என் நண்பன் ஒருத்தன், “ஒரு இந்து மாட்டுக் கறி சாப்பிடலாமாடா, அதுவும் கன்னுக்குட்டிக் கறிய?”ன்னு திட்டினான். அவன் பேசுன பேச்சுல எனக்குக் குற்ற உணர்ச்சி வந்திடுச்சி. என்னம்மோ, சின்னக்கண்ணன நானே கொன்னு தின்னுட்டது மாதிரி ஃபீல் பண்ண வெச்சிட்டான்.

அறிவுரை சொல்றவன் ஒருபோதும் நம் பசியை ஆத்தப்போறது இல்லைன்னு தெரிஞ்சதும், மறுபடியும் பீப் சாப்பிட ஆரம்பிச்சிட்டேன். பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்ங்கிற வார்த்தையோட முழு அர்த்தம் அன்னைக்குத்தான் விளங்குச்சி.

வீட்ல ஆடு, மாடு வளர்க்கிறவங்க அதை மத்தவங்க சாப்பிடக் கூடாதுன்னு சொல்றது இல்ல. அதேமாதிரி சாப்பிடுறவங்களும் இது இந்துக்களோட புனித விலங்கு; அதனால அதக் கொன்னு திம்போம்னு சிந்திக்கிறதில்ல. இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டே, சச்சரவு பண்றது எதற்காக? அதுதான் இந்துத்துவா அரசியல்!

ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பு களுக்கு கிராமத்தான்கள் சொல்வது ஒண்ணுதான். உலகின் மிகப் பழமையான மதம் இந்து மதம்னு நீங்க சொல்றது உண்மைன்னா, அது இத்தன நூற்றாண்டா தாக்குப்பிடிச்சி நிக்கிறதுக்குக் காரணம், அதில் இருக்கிற சகிப்புத்தன்மைதான். இந்துத்துவாங்கிற பேர்ல அதைக் கெடுத்துறாதீங்க.

அரசியல் பண்ணத்தான் செய்வோம்னா, அதுக்கு ஒரு யோசனை சொல்றேன். கடந்த 13 வருஷத்துல நான் எரநூத்திச் சொச்சம் அசைவ ஓட்டல்ல சாப்பிட்டுருக்கேன். எங்கு மட்டன் சாப்பிட்டாலும், ‘இதெல்லாம் மட்டன்தானா? இல்ல மாடா?’ங்கிற சந்தேகம் தொடருது. குடும்பத்தோட சாப்பிடப்போற எல்லா இந்துக்களுக்கும் இதே சந்தேகம் வரும்னு நினைக்கிறேன். அதனால, உங்க ‘அரை டவுசர்களைப்’ பூராம் இந்த மாதிரி ஓட்டல்களுக்குக் கங்காணியா போட்டு நம்ம கலாச்சாரத்தைக் காப்பாத்துங்க. அதே மாதிரி டாஸ்மாக் பார் சைடிஷ்களையும் மேற்பார்வையிடுங்க.

நாட்டுல மொத்தம் எத்தனை பிஜேபி, ஆர்எஸ்எஸ்காரங்க இருக்காங்களோ அத்தனை பேரும் இந்த மாதிரி ‘பொதுச் சேவை’க்குப் போயிட்டிங்கன்னா, வீட்ல அவனெவனுக்கு என்ன பிடிச்சிருக்கோ அத நிம்மதியா சாப்பிடலாம் பாருங்க.

அப்புறம் கேரளாவுக்குக் கொஞ்சம் சிறப்புக் கவனம் செலுத்துங்க. ஏன்னா, ‘மாட்டுக் கறி சாப்பிடுறத நாங்க எதிர்க்க முடியாது’ன்னு கேரள பாஜக தலைவரே சொல்லிட்டாரு. அதை முறியடிக்கதுக்கும் ஒரு ஐடியா சொல்லுதேன் கேட்டுக்கோங்க.

காளை வன விலங்கு… பசு?
போன ஆட்சியில மத்திய காட்டிலாகா அமைச்சரா இருந்த ஜெய்ராம் ரமேசு, சிங்கம், புலி, கரடி, குரங்கு போன்ற வன விலங்குகளைக் காட்சிப்படுத்தவோ, வித்தை காட்டவோ கூடாதுன்னு ஏற்கெனவே இருக்கிற சட்டத்துல, 2011ல ஒரு திருத்தம் பண்ணுனாரு ஞாவகம் இருக்குதா? அந்தப் பட்டியல்ல காளை மாட்டையும் சேர்த்துட்டாரு. காளை வன விலங்காம் (ஆனா, யானையைச் சேர்க்கலை).

காளை வன விலங்குன்னா, அதோட துணைவியார் பசுவும் வன விலங்குதான? அதனால, மாட்ட வெட்டுத வனையும், மாட்டுக் கறியச் சாப்புடுதவனையும் புடிச்சி வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்துல 7 வருஷம் உள்ள போடுங்க. மாட்டுக் கறி விற்கத் தடைன்னு சட்டம் போடாமலே அத கேரளாவுல அமல்படுத்துன சந்தோஷம் உங்களுக்கு. எங்க ஜல்லிக்கட்டைக் கெடுத்த ஜெய்ராம் ரமேசை மாட்டுக் கறி திங்கவிடாம ஆக்குற சந்தோஷம் எங்களுக்கு. எப்படி டீல்?

திராவிடக் கட்சிகள் ஆட்சியிலேயே ஆடு, மாடு, கோழிய கோயில்கள்ல வெட்ட தடைச் சட்டம் போட முயற்சி பண்ண ‘முற்போக்கான’ மாநிலம்தான் தமிழ்நாடு. ஆளுங்கட்சி உதவியோட தமிழ்நாட்டு லேயும் பசு வதைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்திட்டீங்கன்னா போதும். முரண்டுபிடிக்கிற தமிழ்நாடும், கேரளாவும் உங்க கைக்குள்ள வந்துடும். அப்புறம் என்ன, இந்தியாவே உங்க கண்ட்ரோல்தான?

அப்படியே, மாட்டைக் கடிச்சி, ஆட்டைக் கடிச்சி கடைசியில அசைவத்துக்கு எல்லாம் தடை போட்டுருங்க. பருப்பு விலை கிலோ பதினெட்டாயிரம் ரூபா ஆகிரும். அப்புறம் என்ன… 2016 சட்டசபைத் தேர்தல்ல உங்க பருப்பு நல்லாவே வேகும்! வாழ்த்துகள்!
கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

No comments:

Post a Comment