Thursday, October 22, 2015

from www.tamil.thehindu.com...

அஞ்சாப்பு படிச்சப்ப, திடீர்னு ரஜினி, ராமராஜன் ரசிகர்களுக்குள்ள சண்ட வந்திருச்சி. அவங்க ரஜினியை ‘காக்கா வலிப்பு’னு சொல்ல, நாங்க ராமராஜனை ‘டவுசர்’னு ஏச பிரச்சன பெருசாயிட்டு. உள்ளூர் பஞ்சாயத்துத் தேர்தல் முடிஞ்ச நேரம்போல, ‘யாரு பெரியாளுன்னு ஓட்டுப்போட்டுப் பாத்திருவோமால’ன்னு ஒருத்தன் சவால் வுட்டான். ‘இன்னைக்கு சாயங்காலம் ஒண்ணுக்கு மணி அடிச்சதும் எலெக் ஷன்டா’ ன்னு நாங்களும் பதில் சவால் வுட்டோம்.

காம்பஸ் டப்பா தான் ஓட்டுப் பொட்டி, குச்சி தான் ஓட்டு. ஒரு டப்பாவுல முருங்கப்பசையை வெச்சி ரஜினி படத்தை ஒட்டுனோம். இன்னொரு டப்பாவுல சோத்துப்பசைய வெச்சி ராமராஜன் படத்தை ஒட்டுனாம் இலங்காமணி. வாக்குப்பதிவு தொடங்குச்சி. ஊரான் டப்பாவுல குச்சியை எவன்தான் போடுவான்? ஓட்டுப்பூத்து வெறிச்சோடிப்போச்சு.

எங்கப்பாவும் கடைக்காரரு, இலங்காமணியோட தாத்தாவும் கடைக்காரரு. ரெண்டு பேரும் குச்சிகள ஓசியா குடுத்து வகுப்பு பயல்வலப் பூராம் ஓட்டுப் போட வெச்சோம். “அவன் நாலு குச்சிதான் குடுத்திருக்கான். நாம மொத்தம் ஆறு குச்சி குடுத்திருக்கோம். கண்டிப்பா நாமதான் ஜெயிப்போம்”னு வீரன்மாடசாமி எங்காதுக்குள்ள ஓதுனான். நம்பிக்கையோட, ஓட்ட எண்ண ஆரம்பிச்சோம். ரஜினிக்கு 24 ஓட்டு விழுந்திருந்திச்சி. மொத்த ஓட்டே முப்பத்தாறுதாம். ஜெயிச்ச சந்தோஷத்துல, ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் கொழந்தையும் சொல்லும்’னு பாட்டுப்படிச்சி முடிய கோதிவிட்டோம். 

“செத்தநேரம் சும்மா இருங்கலே, ராமராஜனுக்கு 32 ஓட்டு விழுந்திருக்கு”ன்னு அவனுவ சொன்னானுவ. ஏமாத்துறானுவளோன்னு மறு எண்ணிக்கை வெச்சோம். எப்பிடிப்பாத்தாலும் 32 ஓட்டு வந்துருச்சி. பொறவுதான் உண்மை தெரிஞ்சுது. நாங்க ஒரு குச்சிய நாலுநாலா உடைச்சி ஓட்டுப் போட்டா, அந்தப் பக்கிக எட்டெட்டா உடைச்சிப் போட்டுருக்கானுவ. பூரா குச்சும் எலிப்புழுக்கை தண்டித்தான் இருந்துச்சி. பொறவென்ன, ரஜினியையே தோக்கவெச்சி, ராமராஜன் செயிச்சிட்டாரு.

நடிகர் சங்கத் தேர்தல்ல சரத்குமாரு அணி முன்னிலைங்கிற செய்தியைக் கேட்டதும், எனக்கு அந்தப் பள்ளிக்கோடத்து தேர்தல் ஞாவகம் வந்துருச்சி. ரெண்டு தேர்தலுக்கும் ஆறு வித்தியாசம்தாம். எங்க பள்ளிக்கோடத்துல ஐடி கார்டு கெடையாது. சரத்குமார், ராதாரவி, நாசர் எல்லாம் ஸ்கூல் பசங்க மாரி ஐடி கார்டு போட்டுருந்தாங்க. தேர்தலப்ப நாங்க ஒண்ணு ரெண்டு கெட்டவார்த்தைய அர்த்தம் தெரியாமப் பேசிக்கிட் டோம், இவங்க வெவரம் தெரிஞ்சே சாதியைச் சொல்லி சண்டை போட்டுக்கிட்டாங்க. எங்க தேர்தல்ல பக்கத்து கிளாஸ் பையங்கள எல்லாம் ஓட்டுப்போட விடலை. இங்க கே.எஸ்.ரவிக்குமார், கங்கை அமரன் எல்லாம் ஓட்டுப்போடுறாங்க (அவங்களும் நடிகர்களாம்!) நாங்க யாரையும் தடுக்கல, இங்க, சரத்குமார் செட்டு நடிகரான மன்சூர் அலிகானையே ஓட்டுப்போடவிடல. நாங்க யாரும் அழல, யாரையும் தள்ளியும்விடல. இங்க அதுவும் நடந்துச்சி.

இன்னொரு முக்கியமான விஷயம் ர, ரா தேர்தலைப் பத்தி எங்க வாத்தியாருக்கே தெரியாது. இவங்க தேர்தல் ஆரம்பிச்சதுல இருந்து முடியிற வரைக்கும் நாலு டிவியில லைவ் பண்ணுனாங்க. இந்த விஷயத்துல நடிகர்கள குறை சொல்லுததா, டிவிகாரங்கள குறை சொல்லுததான்னு ஒண்ணும் புரியல. நல்ல வேள என் எதிர்பார்ப்புக்கு மாறா, சரத்குமாரு தோத்துட்டாரு. இல்லன்னா விருதுநகர்ல பிரம்மாண்டமான காமராஜர் மணிமண்டபமும், சென்னையில சிவாஜி மணிமண்டபமும், வானுயர்ந்த நடிகர் சங்கக் கட்டடமும் கட்டுன மாரி, சீனியர் உறுப்பினர்களுக்காக ஆயிரம் சதுரடியில இலவச வீடு கட்டிக் குடுக்கும் பணிக்கு தன்னையே அர்ப்பணிச்சிருப்பாரு. ஏற்கெனவே சமத்துவ மக்கள் கட்சியைத் தனியாளா நடத்தி வார அவருக்கு கூடக்கொஞ்சம் கஷ்டத்தக் குடுத்திறக்கூடாதுன்னுதாம், மிச்ச நடிகர்க எல்லாம் நாசருக்கு ஓட்டுப்போட்டிருக்காங்கபோல.

இதுக்கு நடுவுல, சங்கத்துப் பேர தமிழ்நாடு நடிகர் சங்கம்னு மாத்தணும்னு பாரதிராஜா சொன்ன கருத்த தன்னோட கருத்து மாரியே ரஜினியும் சொல்லிட்டாரு. அவர் என்ன சொன்னாலும் எதுத்துப் பேசுற கமலு, இந்திய நடிகர் சங்கம்னு புதுக்குண்டை போட (நல்ல வேள, உலகநாயகன் சங்கம்னு சொல்லல) ‘ரெண்டும் வேணாம். நடிகர் சங்கம்னு பேரு வைங்கப்பா போதும்’னு தலைவன் கவுண்டமணி தீர்ப்புச் சொல்லும்படியா ஆயிடுச்சி.

ஓட்டுப்போட வந்த எல்லாத்தையும் மாரி நினைச்சிக்கிட்டு விஜயகாந்த்கிட்ட நிருபர் ஒருத்தர் கேட்டாரு, ‘பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் எப்படியிருந்துச்சி?’ன்னு. ‘தமிழ்நாட்டுல எனக்கே பாதுகாப்பில்ல. மக்களுக்கும் பாதுகாப்பு இல்ல, அதைவிட்டுட்டு நடிகர்களுக்குப் பாதுகாப்பு இருக்கான்னு கேட்கீங்களே? அய்யோ அய்யோ’ன்னு போய்ட்டாரு. இந்த விஷயத்துல, நாம ஹீரோன்னு கொண்டாடுத ஆளுங்க காமெடியனாவும், காமெடியன்னு சொல்லுத ஆளுக ஹீரோவாவும் இருக்காங்க பாருங்க. நடிகர் சங்கத் தேர்தல் முடிவு வந்திருச்சி... இனிமே பருப்பு விலை கொறைஞ்சிரும்னு நாம கிண்டல் பண்ணிட்டு இருக்கோம். நடிகர் தேர்தல் என்னதான் காமெடியா இருந்தாலும், ‘இனிமே வாக்குறுதிய நிறைவேத்த முடியலன்னா ராஜிநாமா பண்ணிறணும்’னு சில குரல்க பளிச்சுன்னு கேட்டுச்சே கவனிச்சீங்களா? நாம அப்படிக் கேக்க முடியுமா? முதல்ல நம்மாளுக என்னென்ன வாக்குறுதி குடுத்தாங்கன்னு ஞாவகமாவது இருக்கா?

உதாரணத்துக்கு 2011 அதிமுக தேர்தல் அறிக்கை ஞாபகம் இருக்கா? தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி ரூவா கடனாளி மாநிலங்கிற தலைக்குனிவுல இருந்து மீட்போம்னாங்க, மின் உற்பத்தியைக் கூட்டுவோம்னாங்க, போக்குவரத்துத் துறைய நவீனமயமாக்குவோம், விமானக் கருவிகள் தயாரிப்பு மற்றும் பழுது பார்க்கும் தொழிற்சாலையுடன் கூடிய ஏரோ பார்க் தென் தமிழகத்தில் அமைக்கப்படும்னாங்க, சென்னைய தவுத்து தமிழ்நாட்டோட தெக்கு, கிழக்கு மேக்கு பகுதியிலேயும் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்னாங்க, சென்னை, மதுரை, திருச்சி, கோவையில் மோனோ ரெயில் விடப்படும்னாங்க, தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள செறப்பா செயல்படுத்துவோம்னாங்க, குறைஞ்ச கட்டணத்துல அரசு கேபிள் இணைப்புன்னாங்க, தமிழ் மொழியை நீதிமன்ற மொழியாகவும், இந்திய ஆட்சி மொழியாகவும் ஆக்கி, தமிழில் படிச்சவங்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருவோம்னாங்க, வறுமைக் கோட்டுக்குக் கீழ உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 லிட்டர் மினரல் வாட்டர் தருவோம்னாங்க, இன்னும் எவ்வளவோ கெடக்கு. சொன்னதுல நடந்தது என்னன்னா, விலையில்லா அரிசி, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப், ஆடு, மாடுதான் கரெக்ட்ரா வீடு வந்து சேந்திருக்கு. மிச்சமெல்லாம் என்னாச்சு? ஞாபகம் இருக்கா? அவங்களும் மறந்துட்டாங்க, நாமளும் மறந்துட்டோம்!

நாம, வெறும் மூவாயிரத்துச் சொச்சம் ஓடடுள்ள நடிகர் சங்கத்தை ஏமாத்துனவங்கள கலாய்க்கோம். முழுசா மூணரைக்கோடி ஓட்டப் போட்டுட்டு பேந்தப் பேந்த முழிக்கோம். நடிகர்களப் பத்தி சிந்திச்சது போதும், அடுத்து நம்ம தேர்தல் வரப்போகுது மக்களே, கொஞ்சம் அதப்பத்தியும் யோசிங்க. இதைவிட பெரிய வாக்குறுதிப் பட்டியலோட ஸ்டாலினும், அன்புமணியும் வந்துக்கிட்டு இருக்காங்க. அவங்கள நிப்பாட்டி ரஜினி மாரி கேள்வி கேளுங்க - உங்க வாக்குறுதிகள குறிச்ச காலத்துல செய்ய முடியலைன்னா ராஜிநாமா பண்ணிடுவீங்களான்னு. அப்படியாது மாற்றம், விடியல் வருதான்னு பாக்கலாம்!
- கே.கே.மகேஷ்,

No comments:

Post a Comment