பகத் சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட தினத்தில் அவர்களுக்கான அஞ்சலி!
இன்று நாம் அனுபவிக்கும் இந்தச் சுதந்திரம்தான் எத்தகைய தியாகங்களின் விளைவு! பிரிட்டிஷ் இந்தியாவில் சிறை வாழ்வே ஒரு நரகம். அதை வாழ்ந்து அதற்குள்ளேயே உயிர்த் தியாகம் செய்வது என்ற அனுபவத்தை எப்படிப் புரிந்துகொள்வது?
நீண்ட காலம் சிறையில் வாழ்ந்தவர் சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணு. “தூக்கு தண்டனைக் கைதி களில் பலர், சிறையில் தூக்குமேடைக்குக் கொண்டு போவதற்கு முன்பே அதிர்ச்சியில் ஏறக்குறைய இறந்துவிடுவார்கள். உயிர் இல்லாத உடல்களைத் தூக்கு போடுவதுபோலத்தான் தூக்கு தண்டனைகள் நிறைவேறும்” என்கிறார்.
ஆனால், பகத் சிங்கின் சிறை வாழ்வும் உயிர்த் தியாகமும் தனித்தன்மையானவை.
புரட்சிவாதிகள் இறக்க வேண்டும்
பகத் சிங் மற்றும் தோழர்கள் தங்களது சிறை அறை களுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது காங்கிரஸ் தலைவர் பீம்சென் சச்சார், பகத் சிங்கும் அவரது தோழர்களும் நீதிமன்றத்தில் தங்களை ஏன் தற்காத்துக் கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
“புரட்சிவாதிகள் இறக்க வேண்டும்” என்று பதிலளித் தார் பகத் சிங். “அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகள் தியாகத்தின் மூலமாகத்தான் வலுவடை யும், நீதிமன்றத்தின் மேல் முறையீடுகள் மூலம் அல்ல.”
“நான் விடுதலை அடைந்தால் அது பெரும் பிழையாக மாறிவிடும். நான் புன்னகையுடன் மரணத்தை எதிர்கொண்டால், இந்தியாவின் தாய்மார்கள் தங்களது பிள்ளைகளும் பகத் சிங்கைப் போல இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். உறுதியான சுதந்திரப் போராட்ட வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தவுடன் புரட்சியின் வெற்றிநடையைத் தடுத்து நிறுத்த எந்தச் சக்தியாலும் முடியாது” என்றார் அவர்.
‘எப்போது விடுதலை அடைவோம்’ என்ற ஏக்கத்துக்கும் முழுச் சம்மதத்துடன் உயிர்த் தியாகம் செய்யும் மனநிலைக்கும் என்ன இடைவெளி?
நாட்டுக்குச் செய்தி
பகத் சிங்கின் கடைசி விருப்பத்தைக் கேட்டறிய அவரது வழக்கறிஞர் பிராண்நாத் மேத்தா, பகத் சிங் தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பாக அவரைச் சந்தித்தார். செல்லுக்குள், கூண்டில் அடைபட்ட சிங்கம்போலக் குறுக்கும்நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த பகத் சிங், வழக்கறிஞரை ஒரு பெரிய புன்னகையுடன் வரவேற்று, தான் கேட்ட ‘தி ரெவெல்யூஷ்னரி லெனின்’ என்கிற புத்தகத்தைக் கொண்டுவந்தீர்களா என்று கேட்டார்.
புத்தகத்தை மேத்தா கொடுத்தவுடன் மகிழ்ந்துபோய் உடனே படிக்க ஆரம்பித்துவிட்டார் பகத் சிங். “நாட்டுக்கு ஏதாவது செய்தி உண்டா?” என்று மேத்தா கேட்டார். புத்தகத்திலிருந்து பார்வையை விலக்காமல் பகத் சிங் சொன்னார்: “இரண்டு செய்திகள். எதேச்சாதிகாரம் ஒழியட்டும்... புரட்சி ஓங்கட்டும்.”
“நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?” என்று மேத்தா கேட்டபோது, பகத் சிங் பதில் சொன்னார்: “மகிழ்ச்சியாக இருக்கிறேன், எப்போதும்போல.”
“ஏதாவது ஆசை இருக்கிறதா?” என்று மேத்தா கேட்டார்.
“ஆமாம், மீண்டும் இந்த தேசத்திலேயே பிறக்க வேண்டும். இந்த தேசத்துக்குச் சேவை செய்ய வேண்டும்” என்றிருக்கிறார். பிறகு, மேத்தாவிடம் தனது வழக்கில் நிறைய அக்கறை காட்டிய நேருவுக்கும் சுபாஷ் சந்திர போஸுக்கும் நன்றி சொல்லும்படி பகத் சிங் சொல்லியிருக்கிறார்.
மீண்டும் சந்திப்போம்!
பகத் சிங்கைச் சந்தித்ததைத் தொடர்ந்து ராஜகுருவையும் மேத்தா சந்திக்கிறார். ராஜகுரு அவரிடம் சொல்லும் கடைசி வார்த்தைகள்: “நாம் விரைவில் மீண்டும் சந்திப்போம்.”
சுக்தேவ் ஒன்றும் சொல்லாமல் தனக்கு சில மாதங்களுக்கு முன்பு மேத்தா தந்த கேரம் போர்டை ஜெயிலரிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு மேத்தாவுக்கு நினைவுபடுத்துகிறார்.
மேத்தா சென்ற பிறகு, அவர்களிடம் அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு 11 மணி நேரங்கள் முன்பே அவர் கள் தூக்கிலிடப்படப்போவதாகத் தெரிவிக்கிறார்கள். அடுத்த நாள் காலை ஆறு மணிக்குப் பதில் அதே நாள் ஏழு மணிக்கு அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள்.
பகத் சிங் அந்தப் புத்தகத்தின் ஒரு சில பக்கங் களையே படித்து முடித்திருந்தார். “ஒரு அத்தியாயத்தை முடிக்கவிட மாட்டீர்களா?” என்று கேட்டார்.
தூக்குமேடையில் “யாரை முதலில் தூக்கிலிட வேண்டும்” என்று தூக்கிலிடுபவர் கேட்டார். சுக்தேவ் தான் போக விரும்புவதாகச் சொன்னார்.
அவர்களது தைரியத்தால் நெகிழ்ந்துபோன அதிகாரி சடலங்களை அடையாளம் காட்டுமாறு தனக்கு இடப்பட்ட கட்டளையை ஏற்க மறுத்தார். அவர் அந்த இடத்திலேயே இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பதில் அவருக்குக் கீழிருந்த வேறொரு அதிகாரி அந்த வேலையைச் செய்தார்.
நாயகர்களின் சிதைக்குக் காவல்
முதலில் இறுதிச் சடங்கை ராவி ஆற்றின் கரையில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த நதியின் ஆழம் மிகவும் குறைவாக இருந்ததால் சட்லஜ் நதிக்குச் செல்ல முடிவு செய்யப்பட்டது. சட்லஜ் நதிக்கு அருகில் இருந்த பெரோஸ்பூர் நகருக்கு லாரி சென்றபோது லாரியில் சில பிரிட்டிஷ் படையினரும் இருந்தார்கள். சட்லஜ் நதிக்கரையில் சடலங்களுக்குத் தீ மூட்டப்பட்டவுடனேயே அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டார்கள்.
கிராமப்புறத்தில் குறிப்பாக கந்தா சிங் வாலா கிரா மத்தில் வாழ்ந்துகொண்டிருந்த மக்கள், தீ ஜுவாலை களைப் பார்த்து அந்த இடத்துக்கு விரைந்தார்கள். அவர்களைப் பார்த்த படைவீரர்கள் சடலங்கள் பாதி எரிந்துகொண்டிருந்தபோதே விட்டுவிட்டு வண்டியில் ஏறி லாகூருக்கு விரைந்துவிட்டார்கள். அந்தத் தனிமையான இரவு முழுவதும் தங்கள் நாயகர்களின் உடல்களின் அருகில் அமர்ந்திருந்தார்கள் அந்தக் கிராமத்தினர்.
ஆயிரம் மடங்கு வணங்குவோம்
‘யங் இந்தியா’வில் காந்தி, ‘பகத் சிங்கும் தோழர்களும் தூக்கில் போடப்பட்டுவிட்டனர். காங்கிரஸ் அவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் வீணாகிவிட்டன. அவர்கள், மாவீரர்கள். அவர்களை 1,000 மடங்கு வணங்குவோம். ஆனால், அவர்களைப் பின்பற்ற முடியாது. நமது மக்கள் நொறுங்கிப்போனவர்கள்; ஆதரவற்றவர்கள். வன்முறையை நாம் நமது வழியாகக் கொண்டால் நிலைமை மோசமாகிவிடும்’ எழுதினார்.
பகத் சிங்கைப் பொறுத்தவரை சுதந்திர இந்தியாவுக் கான போராட்டம் என்பது அடிப்படையில் பொருளாதார முன்னேற்றத்துக்கான போராட்டமே. சுதந்திரம், முன்னேற்றத்துக்கான ஒரு வாய்ப்பை வழங்கும். வறுமையை ஒழிக்க முடியாத சுதந்திர இந்தியா, வெறும் பெயரளவிலேயே சுதந்திரமாக இருக்கும். ஏற்கெனவே இருக்கும் ஒரு சூழலுக்குப் பதில் அதே போல வேறொரு சூழலை உருவாக்குவதில் பகத் சிங்குக்கு விருப்பமில்லை.
ஒருமுறை பகத் சிங், தன்னுடைய தாய் வித்யாவதி கவுருக்கு எழுதிய கடிதம், இந்தியாவைப் பற்றியும் உண்மையான சுதந்திரத்தைப் பற்றியும் பகத் சிங் கொண்டிருந்த எண்ணத்தைக் கச்சிதமாகச் சொல்லிவிடுகிறது:
“அம்மா, எனது நாடு ஒரு நாள் சுதந்திரம் அடைந்துவிடும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வெள்ளைக்காரத் துரைமார்கள் விட்டுச்சென்ற நாற்காலிகளில் மாநிறத் தோல் துரைமார்கள் வந்து உட்கார்ந்துவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது.”
த. நீதிராஜன்,
தொடர்புக்கு: neethirajan.t@thehindutamil.co.in
பகத் சிங் மறைந்த தினம் - 23 மார்ச் 1931
(Courtecy: www.tamil.thehindu.com0
we are slaves to the capital in the freedom society of india.our woking energy is being exploited by the capital
ReplyDeletelet the heros be our inspirators for ever
ReplyDelete