Sunday, April 13, 2014

No Fear...

எல்லா பொதுத் தேர்வு களும் முடிந்து மாணவர்கள் அப்பாடா என்று மூச்சு விட்டிருப்பார்கள். ‘காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி’ என்று கவியரசு கண்ணதாசன் சொன்னதுபோல் அடுத்து என்ன செய்வது என்று கவலை தொடங்கியிருக்கும். நாம் நினைத்த படிப்பு கிடைக்குமா பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்க முடியுமா என்றெல்லாம் மாணவர்கள் கவலைப்பட ஆரம்பித்திருப்பார்கள்.
இன்னும் சிலர் மாநில அளவில் ரேங்க் வாங்கினால் நம்மிடம் பேட்டி எடுக்கவரும் தொலைக்காட்சி, பத்திரிகை நிருபர்களுக்கு என்ன பேட்டி கொடுக்கலாம், அப்போது என்ன உடை அணியலாம் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பார்கள். எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடுதல் என்பது வேறு. கவலைப்படுவது என்பது வேறு. நன்றாக திட்டமிட்டால் வெற்றி பெறுவது சுலபம். ஆனால் சில சமயம் நாம் எவ்வளவுதான் திட்டமிட்டாலும் நினைத்தது நடக்காமல் போக நேரிடும்.
என்னதான் ஹெல்மெட் போட்டுக் கொண்டு ஜாக்கிரதையாக வண்டி ஓட்டினாலும் மேலே பறந்த விமானம் நம் தலை மீது விழுந்தால் என்ன செய்ய முடியும்? வெற்றி அடைவதைவிடச் சிறந்த விஷயம் தோல்வியைப் பக்குவமாக எதிர்கொள்வது.
எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு மருத்துவராக வேண்டும் என்பதே கனவு. பிளஸ் டூ தேர்வு முடிவதற்கு முன்பே அவளை ‘டாக்டர்’ என்று அழைக்க ஆரம்பித்தனர். தேர்வு முடிவுகள் வந்து மதிப்பெண்கள் குறைந்துவிட்டது.
மனமொடிந்த அப்பெண் தூக்கில் தொங்கிவிட்டாள். இது நடந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. இன்றுவரை அப்பெண்ணின் தாயால் எத்தனை மாத்திரைகள் போட்டாலும் தூங்க முடியவில்லை. எதிர்பார்ப்புகள் தேவைதான். ஆனால் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போனால் அடையும் ஏமாற்றங்களைத் தாங்கப் பழக வேண்டும்.
தேர்வில் மதிப்பெண்களைப் பெறுவது மட்டும் கல்வியல்ல. விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கும், வாழ்க்கையை எதிர்கொள்வதற்கும்தான் கல்வி. நம்மை மகிழ்ச்சி அடையச் செய்வதே உண்மையான கல்வி. கவலை கொள்ளவும் அச்சம் கொள்ளவும் வைப்பதல்ல.
வாழ்க்கையில் வென்றவர்கள் தோற்றவர்கள் என்று கிடையாது. வாழ்க்கையை ரசித்து வாழ்ந்தவர்கள், ரசிக்காமல் வாழ்ந்தவர்கள் என்றுதான் இரு பிரிவினர் இருக்கிறார்கள்.
பறவையின் குரல், மரங்களின் நிழல், குழந்தையின் ஆர்வம், நல்ல எழுத்து தரும் அனுபவம், இனிய இசை தரும் பரவசம், ஆரோக்கியமான உடல் தரும் உற்சாகம் என்று ரசிக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன.
உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்குத் தேர்வுகள் ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. தேர்வு முடிவுகளை மறந்து கோடை விடுமுறையை அனுபவியுங்கள். ‘அஞ்சாமை அல்லால் துணைவேண்டா’- என்கிறது திருக்குறள். பயமில்லாமல் இருப்பதே மிகச் சிறந்த துணை. ஜெயமுண்டு பயமில்லை! 

மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம்  
Courtesy : www.tamil.thehindu.com

No comments:

Post a Comment